Loading...
பிரதமர் மோடிக்கு எதிராக போலி வீடியோ பரப்பிய விவகாரத்தில் மெட்டா இந்தியா தலைவர் மீது வழக்குப் பதிவு
மெட்டா இந்தியா தலைவர் மீது ஹைதராபாத் சைபர் கிரைம் வழக்குப் பதிவு

பிரதமர் மோடிக்கு எதிராக போலி வீடியோ பரப்பிய விவகாரத்தில் மெட்டா இந்தியா தலைவர் மீது வழக்குப் பதிவு

எழுதியவர் Venkatalakshmi V
Jul 31, 2026
09:43 am

செய்தி முன்னோட்டம்

பிரதமர் நரேந்திர மோடியை மையப்படுத்தி செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்ட போலி வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரப்பப்பட்ட விவகாரத்தில், மெட்டா நிறுவனத்தின் இந்தியத் தலைவர் அருண் ஸ்ரீனிவாஸ் மற்றும் சில சமூக வலைதளப் பயனர்கள் மீது ஹைதராபாத் சைபர் கிரைம் காவல்துறையினர் FIR பதிவு செய்துள்ளனர். டெல்லியின் ஜந்தர் மந்தரில் நடைபெற்ற போராட்டங்களின் போது, பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகிய தளங்களில் பிரதமர் மோடியை இழிவுபடுத்தும் வகையிலும் பொதுமக்களைத் தவறாக வழிநடத்தும் வகையிலும் மாற்றியமைக்கப்பட்ட வீடியோக்கள் பரப்பப்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. பாரதிய நியாய சன்ஹிதா (BNS) மற்றும் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

விசாரணை

மெட்டா நிறுவனத்திடம் விசாரணை

இத்தகைய ஏஐ (AI) மூலம் உருவாக்கப்பட்ட போலியான உள்ளடக்கங்கள் மற்றும் விளம்பரங்களைக் கண்டறிந்து நீக்குவதற்கு மெட்டா நிறுவனம் வைத்துள்ள பாதுகாப்பு வழிமுறைகள் குறித்து விளக்கமளிக்குமாறு ஹைதராபாத் சைபர் கிரைம் காவல்துறை ஏற்கனவே சம்மன் அனுப்பியிருந்தது.

இதன் தொடர்ச்சியாக மெட்டா பிரதிநிதி ஒருவர் அதிகாரிகளைச் சந்தித்து விளக்கமளித்த நிலையில், தற்போது இந்த அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதேபோன்று ஜந்தர் மந்தரில் நடைபெற்ற போராட்டத்தின் போது பிரதமர் மோடி குறித்து தவறான கருத்துகளை தெரிவித்ததாக ருச்சிகா சிங் என்பவருக்கு எதிராக கௌதம் புத் நகர் காவல் நிலையத்தில் ஜீரோ எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.

சமூக அமைதியை கெடுக்கும் வகையில் பேசியதற்காக BNS சட்டப்பிரிவுகள் 352, 353(1) மற்றும் 356(1)-ன் கீழ் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT