தலித் மக்களுக்கு எதிரான கொடுமைகள் நடப்பது தான் சமூக நீதியா: தமிழக ஆளுநர்
மு.க.ஸ்டாலின் தலைமையிலான மாநில அரசுக்கு எதிராக பேசி தொடர்ந்து சர்ச்சையில் சிக்கி வரும் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, இன்று(பிப் 13) மாநிலத்தில் நிலவும் சாதிய ஒடுக்குமுறை குறித்து பேசும் போது, "சமூக நீதி என்பது இது தானா" என்று திராவிட முன்னேற்ற கழக ஆட்சியை சாடியுள்ளார். சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் பி.ஆர்.அம்பேத்கர் என்ற தலைப்பில் பேசிய ஆளுநர், தலித்துகளுக்கு எதிராக மாநிலத்தில் நடக்கும் குற்றச் சம்பவங்களையும், சமூக நலத் திட்டங்களில் இருந்து அரசின் நிதியை திசை திருப்புவதையும் சுட்டிக்காட்டியுள்ளார். "மோடி@20" மற்றும் "அம்பேத்கரும் மோடியும்" ஆகிய புத்தகங்களின் தமிழாக்கத்தை ஆளுநர் இன்று வெளியிட்டார். அப்போது, அம்பேத்கர் மற்றும் அவரது சாதனைகள் பற்றி பேசும்போது அவர் இதை குறிப்பிட்டிருக்கிறார்.
ஆளுநர் உரையின் சுருக்கம்:
சமூக நீதி பற்றி எவ்வளவோ பேசுகிறோம், ஆனால், ஒவ்வொரு நாளும் இங்கு தலித்துகளுக்கு எதிராக பல கொடுமைகள் நடந்து கொண்டு தான் இருக்கின்றன. தலித் மக்களை கோவிலுக்குள் அனுமதிப்பது இன்னும் தடுக்கப்பட்டு கொண்டுதான் இருக்கிறது. தலித் மக்கள் குடிக்கும் நீரில் மனித கழிவுகள் கலப்பது போன்ற சம்பவங்களும் நடந்து கொண்டு தான் இருக்கின்றன. பட்டியலின பெண்களை பாலியல் பலாத்காரம் செய்த 7% பேருக்கு மட்டுமே தண்டனை வழங்கப்பட்டிருக்கிறது. என்று அவர் கூறினார். புதுக்கோட்டை வேங்கைவயலில் பட்டியலின மக்கள் குடிக்கும் குடிநீரில் மனித கழிவுகள் கலக்கப்பட்ட சம்பவத்தை பற்றி பேசிய ஆளுநர், பட்டியலின இளைஞர் கோவிலுக்குள் சென்றதற்காக அவரை தகாத முறையில் பேசிய சேலம் மாவட்ட திமுக நிர்வாகியை பற்றியும் பேசி இருக்கிறார்.