காலக்கெடுவை தவறவிட்டு விட்டீர்களா? இனி 2000 ரூபாய் நோட்டுக்களை மாற்றுவது எப்படி?
ரிசர்வ் வங்கியானது, கடந்த மே மாதம் 2000 ரூபாய் நோட்டுக்களை புழக்கத்திலிருந்து திரும்பப் பெறுவதாக அறிவிப்பை வெளியிட்டு, அதற்கு செப்டம்பர் 30ம் தேதி வரை கால அவகாசத்தையும் அளித்திருந்தது. அதனைத் தொடர்ந்து, 2000 ரூபாய் நோட்டுக்களை வங்கிக் கிளைகளில் மாற்றக் கொள்வதற்கான கால அவகாசத்தை செப்டம்பர் 30ம் தேதியிலிருந்து ஏழு நாட்களுக்கு அக்டோபர் 7ம் தேதி வரை நீட்டிப்பு செய்திருந்தது ரிசர்வ் வங்கி. இந்த காலக்கெடுவையும் தவறவிட்டவர்கள், 2000 ரூபாய் நோட்டுக்களை மாற்ற என்ன செய்ய வேண்டும்? இதற்கான பதிலை தங்களுடைய வலைத்தளப் பக்கத்தில் அளித்திருக்கிறது ரிசர்வ் வங்கி.
2000 ரூபாய் நோட்டுக்களை மாற்ற..
இனி 2000 ரூபாய் நோட்டுக்களை வங்கிகளில் மாற்ற முடியாது. ஆனால், தற்போதும் 2000 ரூபாய் நோட்டுக்களை கையில் வைத்திருப்பவர்கள், ரிசர்வ் வங்கியின் 19 வழங்கல் அலுவலகங்களில் ஏதாவது ஒன்றில் மாற்றிக் கொள்ளலாம் அல்லது அதனை வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்து கொள்ளலாம். தமிழகத்தில் ரிசர்வ் வங்கியின் வழங்கல் அலுவலகமானது, சென்னையில் உள்ள ராஜாஜி சாலையில் அமைந்திருக்கிறது. ரிசர்வ் வங்கியின் வழங்கல் அலுவலகத்திற்கு நேரடியாக செல்ல முடியாதவர்கள், தபால் மூலம் பணத்தை அனுப்பி தங்கள் வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்து கொள்ள கோரிக்கை விடுக்க முடியும். ஆனால், இந்த வழங்கல் அலுவலகங்களில் ரூபாய் நோட்டுக்களை மாற்ற நம்முடை அடையாள அட்டை மற்றும் ரிசர்வ் வங்கி கேட்கும் பிற ஆவணங்களையும் வழங்க வேண்டியிருக்கும்.