தேர்தல் 2026: வோட்டர் லிஸ்டில் உங்க பேரு இருக்கா? ஆன்லைனில் செக் பண்ணுவது எப்படி?
செய்தி முன்னோட்டம்
தமிழகம் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயர் இடம்பெற்றுள்ளதா என்பதை உறுதிப்படுத்துவது ஒவ்வொரு குடிமகனின் கடமையாகும். வாக்குப்பதிவு நாளன்று கடைசி நேர தர்மசங்கடங்களைத் தவிர்க்க, இந்தியத் தேர்தல் ஆணையம் வழங்கியுள்ள டிஜிட்டல் வசதிகளைப் பயன்படுத்தி வாக்காளர்கள் தங்கள் விவரங்களை இப்போதே சரிபார்த்துக்கொள்ளலாம்.
சரிபார்க்கும் முறை
ஆன்லைனில் வாக்காளர் விவரங்களைச் சரிபார்க்கும் முறை
வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா என்பதைச் சரிபார்க்க, இந்தியத் தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான 'electoralsearch.eci.gov.in' என்ற முகவரிக்குச் செல்ல வேண்டும். அல்லது உங்கள் கைபேசியில் 'Voter Helpline App' என்ற செயலியை பதிவிறக்கம் செய்தும் இந்த வசதியைப் பெறலாம். இதன் மூலம் நீங்கள் புதிய வாக்காளராக இருந்தாலும் அல்லது முகவரி மாற்றம் செய்திருந்தாலும், உங்கள் பதிவு உறுதி செய்யப்பட்டுள்ளதா என்பதை எளிதாகத் தெரிந்துகொள்ள முடியும்.
வழிகள்
தேடல் முறைகள்: மூன்று எளிய வழிகள்
தேர்தல் ஆணையம் வாக்காளர்களின் வசதிக்காக மூன்று விதமான தேடல் முறைகளை வழங்கியுள்ளது: EPIC எண் மூலம் தேடுதல்: உங்கள் வாக்காளர் அடையாள அட்டையில் உள்ள எண்களை (EPIC Number) உள்ளிட்டு மாநிலத்தைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் மிக விரைவாக விவரங்களைப் பெறலாம். தனிப்பட்ட விவரங்கள் மூலம் தேடுதல்: உங்கள் பெயர், தந்தை அல்லது கணவர் பெயர், வயது, பாலினம் மற்றும் மாவட்டம் போன்ற விவரங்களை நேரடியாக உள்ளீடு செய்து தேடலாம். கைபேசி எண் மூலம் தேடுதல்: உங்கள் வாக்காளர் அடையாள அட்டையுடன் கைபேசி எண் இணைக்கப்பட்டிருந்தால், ஓடிபி (OTP) மூலம் உடனடித் தகவல்களைப் பெற முடியும்.
பதிவிறக்கம்
வாக்காளர் தகவல் சீட்டைப் பதிவிறக்கம் செய்தல்
தேவையான விவரங்களை உள்ளீடு செய்து 'Captcha' குறியீட்டை பூர்த்தி செய்தவுடன், 'Search' பொத்தானை அழுத்த வேண்டும். உங்கள் பெயர் பட்டியலில் இருந்தால், உங்கள் பாகம் எண் (Part Number), வரிசை எண் மற்றும் உங்கள் வாக்குச்சாவடி மையம் குறித்த முழு விவரங்களும் திரையில் தோன்றும். அங்கேயே 'விவரங்களைப் பார்' என்பதை அழுத்தி, உங்கள் 'வாக்காளர் தகவல் சீட்டை' பதிவிறக்கம் செய்து அச்சுப் பிரதியாக எடுத்துக்கொள்ளலாம். ஒருவேளை தேடல் முடிவுகளில் உங்கள் பெயர் வரவில்லை எனில், உங்கள் பெயர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டிருக்கலாம் அல்லது பதிவு செய்யப்படாமல் இருக்கலாம். எனில், உங்கள் பகுதி வாக்குச்சாவடி நிலை அலுவலரை(BLO) அல்லது 1950 என்ற தேசிய வாக்காளர் உதவி எண்ணைத் தொடர்பு கொண்டு உரிய விளக்கம் பெறலாம்.