ஒரு வாரத்திற்கு மேலாக, சுரங்கத்திற்குள் சிக்கியுள்ள தொழிலாளர்கள் எப்படி சமாளிக்கிறார்கள்?
கடந்த 10 நாட்களுக்கும் மேலாக, உத்தரகாண்ட் சுரங்கத்திற்குள் சிக்கியுள்ள 41 தொழிலாளர்கள், எவ்வாறு நாட்களை கடத்தி வருகின்றனர்? அவர்களுக்கு அன்றாட உணவும், குடிநீரும் எவ்வாறு வழங்கப்படுகிறது என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. நேற்று வரை, சுரங்கத்திற்குள்ளே சிக்கியுள்ள தொழிலாளர்களுக்கு பொறி, அவல், சுண்டல் மற்றும் உலர் பழங்கள் உணவாக அனுப்பப்பட்டு வந்தது. ஆனால் நேற்று, திங்கள்கிழமை, இடிபாடுகளுக்கிடையே, 6 அங்குல குழாய் வெற்றிகரமாக நுழைக்கப்பட்டதால், அதன் மூலம், அவர்களின் தினசரி உணவு விநியோகத்தை, வாழைப்பழங்கள், ஆப்பிள் துண்டுகள் மற்றும் கிச்சடி என மாற்றி அமைத்துள்ளது நிர்வாகம். சரி, அந்த தொழிலாளர்கள் எவ்வாறு உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் தங்களைத் தக்கவைத்துக்கொள்கிறார்கள்?
அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட மனநல மருத்துவர் மேற்பார்வையிடுகிறார்
சிக்கிய தொழிலாளர்களின் மன ஆரோக்கியத்தை மேற்பார்வையிடும் அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட மனநல மருத்துவரான டாக்டர் அபிஷேக் ஷர்மா அவர்களின் மனஉறுதியினை ஊக்கப்படுத்தி வருகிறார். "நாங்கள் தொடர்ந்து அவர்களுடன் தொடர்பில் இருக்கிறோம். யோகா, நடைபயிற்சி போன்ற செயல்பாடுகளை பரிந்துரைக்கிறோம். மேலும் உயர்ந்த மன உறுதியை பராமரிக்க, அவர்களிடையே உரையாடல்களை ஊக்குவிக்கிறோம்". "உள்ளே சிக்கியவர்களில் கப்பர் சிங் நேகி என்பவர் இதற்கு முன் இதே போன்றதொரு சூழலில் இருந்துள்ளார். அவர்களில் மூத்தவராக இருப்பதாலும், இது போன்ற சிக்கலில் இருந்து மீண்ட அனுபவம் உடையவர் என்பதாலும், அவர், அனைவரிடத்திலும் நம்பிக்கையை வளர்த்து வருகிறார்," என்று அவர் கூறியதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தெரிவிக்கிறது.
குழாய் மூலம், மொபைல், சார்ஜர், வைஃபை கனக்க்ஷன் பொருத்தவும் ஏற்பாடு
நேற்று பொருத்தப்பட்ட குழாய் மூலம், தொழிலாளர்கள் தங்களை பிஸியாக வைத்திருக்க மொபைல் போன்கள் மற்றும் சார்ஜர்களைப் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் DRDO உதவி மூலம் வைஃபை கனக்க்ஷன் பொருத்தவும் ஏற்பாடு செய்யப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நேற்று இந்த 6 இன்ச் குழாய் மூலம், எண்டோஸ்கோபி கேமரா அனுப்பப்பட்டு, தொழிலாளர்களின் நிலைமை ஆராயப்பட்டது. இந்த காட்சிகள் இன்று காலை வெளியாயின. தொழிலாளர்களுக்கு இதுவரை வழங்கப்பட்ட உணவினால், சிலருக்கு செரிமான அசௌகரியம் மற்றும் தலைச்சுற்றல் போன்ற புகார்கள் இருந்ததாகவும், அதற்கு தீர்வுகளும் வழங்கப்பட்டன. அதேபோல நிபுணர்கள் ஆலோசனை பேரில், இடிபாடுகளில் இருந்து ஒரு கிலோமீட்டர் தூரத்தில், அவர்களின் சுகாதாரத் தேவைகளுக்காக ஒரு நியமிக்கப்பட்ட பகுதியையும் உருவாக்கியுள்ளனர்.
இயற்கையான நீர் ஆதாரம்; வாக்கிங் செல்ல இடம்
மற்ற சூழ்நிலைகள் கடினமாக இருந்தபோதிலும், சுரங்கப்பாதைக்குள் இயற்கையான நீர் ஆதாரம் இருப்பது தொழிலாளர்கள் அதிர்ஷ்டம் என அதிகாரிகள் கூறியுள்ளனர். டாக்டர் ஷர்மா கூறுகையில், "இந்த தண்ணீரை குடிப்பதற்கும், பிற தேவைகளுக்கும் சேமித்து பயன்படுத்துவதற்கும் என அவர்களிடத்தில் இருக்கும் பாத்திரத்தை பயன்படுத்தி, அவர்கள் சமயோசிதமாக செயல்பட்டு, சேமித்து வைத்துள்ளனர். எனினும் மருத்துவர்கள், தண்ணீரின் பாதுகாப்பை உறுதி செய்ய, குளோரின் மாத்திரைகள் வழங்கியுள்ளனர்" எனத்தெரிவித்தார். தொழிலாளர்கள் தாங்கள் சிக்கியுள்ள இடத்தை சுற்றி 2 கிமீ தொலைவிற்கு, வாக்கிங் செல்ல இடத்தை சீர்படுத்தியுள்ளனர். சில நாட்களுக்கு முன்பு, ஒடிசாவிலிருந்து சில அரசு அதிகாரிகள் தங்கள் மாநிலத்தைச் சேர்ந்த ஐந்து தொழிலாளர்களிடம் பேச வந்தபோது, அவர்கள் வாக்கிங்கிற்குச் சென்றதாக அதிகாரிகளுக்குத் தெரிவிக்கப்பட்ட போதுதான், அவர்களுக்கே தெரிய வந்தது.
30 நிமிட இடைவேளையில் வழங்கப்படும் உணவு
தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக் கழகத்தின் இயக்குநர் அன்ஷு மணீஷ் கல்கோ, தற்போதைய எடுத்துவரும் முயற்சிகள் பற்றி கூறும்போது,"ஒவ்வொரு அரை மணி நேரத்திற்கும் நாங்கள் உணவை வழங்குகிறோம் மற்றும் ஒவ்வொரு 2-3 மணி நேரத்திற்கும் தொடர்பைப் பராமரிக்கிறோம்". "பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த அதிகாரிகள், உறவினர்கள் மற்றும் மருத்துவ நிபுணர்களும் அவர்களுடன் தொடர்ந்து, எங்கள் சேனல்கள் மூலம் இருவழித் தொடர்புகளை வளர்த்து வருகின்றனர்" என தெரிவித்தார். இந்த சுரங்க பாதை, ஒரு மூடிய இடமாக இருப்பதால் , குளிர், வெப்பநிலை அல்லது கொசுக்கள் தொடர்பான பிரச்சினைகள் எதுவும் இல்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.