கொல்லப்பட்ட பத்திரிகையாளர் சௌம்யா கொலையில் துப்பு துலங்கியது எப்படி?
டெல்லியில், இளம் பத்திரிக்கையாளர் சௌமியா விஸ்வநாதன் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட 5 பேரும் குற்றவாளிகள் என டெல்லி நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்துள்ளது. கடந்த 2008 ஆம் ஆண்டு நடந்த கொலை வழக்கில், போலீசார் எப்படி துப்பு துலக்கினர் என்ற விவரம் தற்போது வெளியாகியுள்ளது. கடந்த 2008 ஆம் ஆண்டு செப்டம்பர் 30 ஆம் தேதி அதிகாலை 3 மணியளவில், வேலையை முடித்துவிட்டு, தெற்கு டெல்லியின் வசந்த் குஞ்ச் பகுதியில் தனது காரில் வீடு திரும்பி கொண்டு இருந்த சௌமியா விஸ்வநாதன் மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
டெபிட் கார்டு மூலம் சிக்கிய கொலையாளி
ஆனால், ஒரு வருடம் கொலையாளிகள் பற்றி தடயம் ஏதும் கிடைக்காமல் தவித்து வந்த போலீசார், 2009 - இல் நடைபெற்ற ஒரு கொலைக்கு காரணமானவர்களை பிடித்து விசாரித்த போது, சௌம்யாவின் கொலைக்கும் தாங்களே காரணம் என கூறியதுபோது, டெல்லி காவல்துறை சற்றே அதிர்ந்தது. மார்ச் 18, 2009 அன்று ஜிகிஷா கோஷ் என்பவர் கொள்ளையடிக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். ஃபரிதாபாத்தில் உள்ள சூரஜ் குண்ட் பகுதியில் இருந்து ஜிகிஷாவின் உடல் மீட்கப்பட்ட இரண்டு மூன்று நாட்களுக்குப் பிறகு, ஒரு கடையில் ஜிகிஷாவின் டெபிட் கார்டைப் பயன்படுத்தி ஒருவர் ஷாப்பிங் செய்தது தெரியவந்தது.
டாட்டூ, வாக்கி டாக்கி உடன் வலம் வந்த கொலைகாரர்கள்
அந்த கடையின் CCTV பதிவை ஆராய்ந்த போது, அந்த நபர் கையில் பச்சை குத்தியிருப்பதைக் கண்டறிந்தனர். அவருடன் வந்த மற்றொரு நபர், கையில் வாக்கி டாக்கி வைத்திருந்ததையும் கவனித்த போலீசார், உடனே துப்பு துலக்க தொடங்கினர். பின்னர் டெல்லி காவல்துறையின் மனித புலனாய்வு வலையமைப்பில் அதிகாரிகள் உன்னிப்பாக பணியாற்றினர், விரைவில், அதன்படி, டெல்லி போலீஸ் குழு, மசூத்பூரில் உள்ள மாலிக் என்ற குற்றவாளியை கண்டுபிடித்தது. மாலிக் தன் கையில் தனது பெயரை டாட்டூ போட்டு கொண்டிருந்தார். அவனோடிருந்த கபூர் என்ற கூட்டாளி தான், ஒரு போலீஸ் அதிகாரியிடமிருந்து வயர்லெஸ் வாக்கி டாக்கியை திருடியவன் என கண்டுபிடித்த காவல்துறை, இருவரையும் கைது செய்தது.
சௌம்யாவின் கொலையில் விலகிய மர்மம்
விசாரணையில், கொலைகாரர்கள், வசந்த் விஹாரில் அருகிலிருந்து ஜிகிஷாவை கடத்திச் சென்று, பின்னர் அவளைக் கொள்ளையடித்த பின்னர் கொலை செய்து உடலை வீசியதை ஒப்புக்கொண்டனர். அப்போது அதற்கு முந்தைய ஆண்டு, அவர்கள் மற்றொரு பெண்ணைக் கொன்றதாகவும் ஒப்பு கொண்டனர். விசாரணையில் அது இளம் பத்திரிகையாளர் சௌம்யா என தெரிய வந்தது செப்டம்பர் 30 , 2008 இரவு, தன்னுடைய அலுவலக பணியை முடித்துகொண்டு சௌமியா, வசந்த் குஞ்சில் உள்ள தனது வீட்டிற்கு சென்றுகொண்டிருந்தார். அப்போது குற்றவாளிகள் மதுபோதையில் அதே ரோட்டில் பயணித்து கொண்டிருந்தனர். ஒரு கார், அதிலும் ஒரு பெண் ஓட்டும் கார், தங்களை முந்துவதை ஏற்றுக்கொள்ள முடியாத கொலையாளிகள், சௌமியாவின் காரை வழிமறிக்க முயற்சித்துள்ளனர்.
15 வருடங்கள் கழித்து கிடைத்த நீதி
ஆனால் சௌமியா வேகமெடுத்து காரை தொடர்ந்து ஒட்டியதில் கோபம் கொண்ட கொலையாளிகளில் ஒருவன், சௌம்யாவை தன்னுடைய கை துப்பாக்கியால் சுட்டுள்ளான். துப்பாக்கி சூட்டில் சம்பவ இடத்திலேயே இறந்தார் சௌம்யா. அவருடைய கார் அங்கிருந்த டிவைடர் மீது மோதி நின்றது. இதை பார்த்ததும் குற்றவாளிகள் அனைவரும் அந்த இடத்தை விட்டு ஓடிவிட்டனர். எனினும், 20 நிமிடங்களுக்குப் பிறகு, போதை தெளிந்ததும் மீண்டும் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். ஆனால், அங்கே போலீஸ்காரர்களைக் கண்டதும், அவர்கள் ஓடிவிட்டனர். தற்போது, இந்த கொலையில், 15 ஆண்டுகளுக்கு பிறகு, குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைத்ததை எண்ணி, சௌம்யாவின் தாய் கண்ணீருடன், காவல்துறைக்கு நன்றி கூறினார்.