உள்துறை அமைச்சர் அமித்ஷாக்கு எதிராக காவல்துறையில் புகார்
காங்கிரஸ் தலைவர்கள் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா, டாக்டர் பரமேஷ்வர் மற்றும் கர்நாடக காங்கிரஸ் தலைவர் டிகே சிவக்குமார் ஆகியோர் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பிற பாஜக தலைவர்கள் மீது இன்று(ஏப் 27) போலீசில் புகார் அளித்தனர். பெங்களூரு ஹைகிரவுண்ட்ஸ் காவல்நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரில், அமித் ஷா கர்நாடக தேர்தல் பிரசாரத்தின் போது, பகை மற்றும் வெறுப்பை ஊக்குவிப்பது போல் பேசி இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. "காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் வகுப்புவாத கலவரம் ஏற்படும் என மத்திய உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். அவர் எப்படி இதைச் சொல்லலாம்? இதுகுறித்து இந்திய தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்துள்ளோம்." என்று டி.கே.சிவக்குமார் புகார் அளித்த பிறகு கூறினார்.
மத நல்லிணக்கத்தை கெடுக்கும் நோக்கில் பேசி இருக்கிறார்: காங்கிரஸ்
இந்த புகாரில், அமித்ஷா, சில பாஜக தலைவர்கள் மற்றும் ஏப்ரல் 25ஆம் தேதி கர்நாடகாவின் விஜய்புரா மற்றும் பிற இடங்களில் பேரணியை ஏற்பாடு செய்தவர்களின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. "இந்திய தேசிய காங்கிரஸின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் நோக்கில், பொய்யான மற்றும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைக்கும் நோக்கில், மக்களிடையே நிலவும் மத நல்லிணக்கத்தை கெடுக்கும் நோக்கில் அமித் ஷாவின் அதிர்ச்சியூட்டும் பேச்சு இருந்தது." என்று புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமித்ஷா பேசிய போது பதிவு செய்யப்பட்ட வீடியோவும் இந்த புகாருடன் இணைக்கப்பட்டுள்ளது. ஐபிசியின் 153, 505(2), 171ஜி மற்றும் 120பி போன்ற பிரிவுகள் இந்த புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளன. கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பாஜகவின் நட்சத்திரப் பிரச்சாரகராக அமித்ஷா தொடர்ந்து பேரணிகளை நடத்தி வருகிறார் .