தங்கப் பல்லை வைத்து 15 வருடங்களுக்கு பிறகு திருடனை பிடித்த போலீஸ்
15 ஆண்டுகளாக போலீஸுக்கு டிமிக்கி கொடுத்த 38 வயதான பிரவின் அஷுபா ஜடேஜாவை, போலீஸார் இன்று(பிப் 11) கைது செய்தனர். துணிக்கடையில் விற்பனையாளராக பணிபுரிந்த இவர், கடந்த 2007ஆம் ஆண்டு கடை உரிமையாளரிடம் இருந்து ரூ.40,000 மோசடி செய்தார். குற்றம் சாட்டப்பட்டவர் போலீஸில் பிடிபடாமல் இருக்க அடையாளத்தை மாற்றிக்கொண்டு குஜராத்தில் உள்ள கட்ச் நகருக்கு இடம் பெயர்ந்திருக்கிறார். 2007இல், தான் வேலை பார்க்கும் கடை உரிமையாளரிடம் கொடுக்க வேண்டிய பணத்தை கொடுக்காமல் அதை யாரோ திருடிவிட்டதாக பொய் கூறி போலீஸையும் அவரது முதலாளியையும் ஏமாற்றியதால் அவர் மீது வழக்கு தொடரப்பட்டது. ஆனால், அப்போது நீதிமன்றத்தில் ஜாமீன் வாங்கிய அவர் தலைமறைவாகிவிட்டார்.
தங்க பல்லை வைத்து உறுதி செய்யப்பட்டது
"காவல்துறையை ஏமாற்றியதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது. கைது செய்யப்பட்ட சில நாட்களுக்குப் பிறகு, குற்றவாளிக்கு நீதிமன்றத்தில் ஜாமீன் கிடைத்தது. அதன் பின், குற்றம் சாட்டப்பட்டவர் மும்பையிலிருந்து தலைமறைவானார். மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. அதனால் அவரை தப்பியோடிய குற்றவாளியாக நீதிமன்றம் அறிவித்தது" என்று ஒரு காவல்துறை அதிகாரி கூறியுள்ளார். சில நாட்களுக்கு முன், பிரவின் குஜராத்தின் கச் மாவட்டத்தில் உள்ள மாண்ட்வி தாலுகாவின் சப்ராய் கிராமத்தில் பதுங்கி இருப்பது தெரிய வந்தது. போலீசார் LIC ஏஜெண்டுகளாக செயல்பட்டு பிரவினை மும்பைக்கு வரவழைத்தனர். அங்கு அவருடைய தங்க பல்லை வைத்து அவர்தான் என்று உறுதி செய்த போலீசார், குற்றவாளியை கைது செய்தனர்.