காஷ்மீரில் இந்திய தேசிய கொடியை ஏற்றிய பயங்கரவாதியின் சகோதரர்
சுதந்திர தினத்தை முன்னிட்டு, ஹிஸ்புல் பயங்கரவாதியின் சகோதரர் ஜம்மு காஷ்மீர் மாநிலம் சோபோரில் உள்ள தனது இல்லத்தில் மூவர்ணக் கொடியை ஏற்றினார். ஜாவித் மட்டூ, ஹிஸ்புல் முஜாயிதீன் என்ற பயங்கரவாத அமைப்பை சேர்ந்த தீவிர பயங்கரவாதி ஆவார். பாதுகாப்பு படைகளின் டாப் 10 பயங்கரவாதிகள் பட்டியலில் ஜாவித் மட்டூவின் பெயரும் இடம் பெற்றுள்ளது. இந்நிலையில், ஜாவித் மட்டூவின் சகோதரர் ரயீஸ் தனது வீட்டின் ஜன்னலில் இருந்து மூவர்ணக் கொடியை அசைப்பது போன்ற ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இது குறித்து பேட்டியளித்திருக்கும் அவர், "நான் என் இதயத்திலிருந்து மூவர்ணக் கொடியை அசைத்தேன். யாரிடமிருந்தும் எனக்கு அழுத்தம் கொடுக்கப்படவில்லை." என்று கூறியுள்ளார்.
'நாம் இந்தியர்கள்': காஷ்மீரில் வாழும் பயரங்கவாதியின் சகோதரர்
மேலும், அவர், " சாரே ஜஹான் சே அச்சா ஹிந்துஸ்தான் ஹமாரா, ஹம் புல்புலே ஹே இஸ்கி யே குலிஸ்தான் ஹமாரா" என்ற சுந்தந்திர பாடலின் வரிகளையும் கூறியுள்ளார். இதற்கு, "உலகத்தை விட சிறந்தது நமது இந்தியா. நாங்கள் அதில் வாழும் நைட்டிங்கேல்கள். இது எங்களது தோட்டம்." என்பது அர்த்தமாகும். ஆகஸ்ட் 13 முதல் 15ஆம் தேதிக்குள் நடைபெறும் 'ஹர் கர் திரங்கா' இயக்கத்தில் மக்கள் பங்கேற்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்திருந்தார். மக்கள் தங்கள் வீடுகளுக்கு முன் தேசிய கொடியை ஏற்றுவது இந்த இயக்கத்தின் ஒரு பகுதியாகும். இதை ஜம்மு காஷ்மீரில் உள்ள பலரும் கடை பிடித்து வருகின்றனர்.