இந்தி மொழியின் திணிப்பு விவகாரம் - மன்னிப்பு கோரியது நியூ இந்தியா அசுரன்ஸ் நிறுவனம்
அண்மையில் நியூ இந்தியா அசுரன்ஸ் காப்பீடு நிறுவனம் ஓர் சுற்றறிக்கையினை வெளியிட்டது. அதில்,'தலைமை அலுவலகத்திற்கு அனுப்பப்படும் அனைத்து மண்டல அலுவலகங்களின் அறிக்கைகளும் இந்தியில் தான் முழுக்கமுழுக்க இருக்கவேண்டும்'. 'தலைமையகத்தில் இருந்து அனுப்பப்படும் பதில்களும், அனைத்து அலுவலகப்பணிகளும் கூட இந்தியில் தான் இருக்கவேண்டும்' என்று உத்தரவிட்டிருந்தது. இந்த அறிக்கைக்கு தமிழகத்தில் பெரும் எதிர்ப்புகள் எழுந்தநிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின், "இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்களின் மொழிகளுக்கு எவ்வித முக்கியத்துவமும் கொடுக்கப்படாத நிலையில், இந்திமொழிக்கு மட்டும் தொடர்ந்து முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது" என்று ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். மேலும்,"எங்கள் மரபு மற்றும் நாட்டின் பன்முகத்தன்மையில் நம்பிக்கை கொண்டுள்ளோம். எங்கள் மொழி சமமாக நடத்தப்படவேண்டும். எங்கள் மண்ணில் தமிழுக்கு பதில் இந்தி திணிக்கப்பட்டால் அதனை எதிர்ப்போம்" என்றும் குறிப்பிட்டிருந்தார்.
பிராந்திய மொழிகள், கலாச்சாரங்கள் மீது நம்பிக்கை அதிகம்
இந்நிலையில், இந்த இந்தி மொழியின் விவகாரம் குறித்து தற்போது நியூ இந்தியா அசுரன்ஸ் காப்பீடு நிறுவனம், மன்னிப்பு கோரி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றினை செய்துள்ளது என்று கூறப்படுகிறது. அதன்படி அந்த பதிவில், 'இந்த இந்தி மொழி விவகாரம் தொடர்பாக நாங்கள் யார் மனதையாவது காயப்படுத்தியிருந்தால் மன்னிப்பு கோருகிறோம். பிராந்திய மொழிகள், கலாச்சாரங்களை மதிக்கும் பணியின் சூழல் மீதே எங்களுக்கு நம்பிக்கை அதிகம்'. 'நமது தேசம் முழுவதும் உள்ள வளமான கலாச்சார மரபு மற்றும் மொழியியல் உள்ளிட்டவையோடு நாங்கள் முழுவதுமாக இணைந்துள்ளோம். அதன் மீது எங்களுக்கு மரியாதையும் அதிகம் உள்ளது' என்று அந்நிறுவனம் பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.