அதானி குழுமத்தில் செய்த முதலீட்டில் இழப்பு ஏதும் இல்லை: LIC
இந்தியாவின் மிகப்பெரிய நிறுவன முதலீட்டாளரான லைஃப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன்(LIC), அதானி குழுமத்தில் செய்த முதலீட்டால் இழப்பு ஏதும் ஏற்படவில்லை என்று விளக்கம் அளித்து ஒரு அறிக்கையை இன்று(ஜன 30) வெளியிட்டிருக்கிறது. கடந்த சில ஆண்டுகளாக LIC வாங்கிய அதானி குழும பங்குகளின் மொத்த மதிப்பு ரூ.30,127 கோடி என்று கூறிய LIC, இந்த முதலீட்டின் மொத்த மதிப்பு ஜனவரி 27ஆம் தேதியின் முடிவில் ரூ.56,142 கோடியாக உயர்ந்திருந்தது என்று தெளிவுபடுத்தியுள்ளது. LIC வாங்கி இருக்கும் அதானி நிறுவன பங்குகள் "AA" அல்லது அதற்கு மேல் உள்ள தரநிலைகளில் இருப்பதால், LICயின் முதலீடுகள் IRDAI வழிகாட்டுதல்களின் படியே இருக்கிறது என்பதையும் LIC கூறி இருக்கிறது.
அதானி குழுமத்துடன் கலந்தாலோசிக்க இருக்கும் LIC
அமெரிக்காவின் ஹிண்டன்பர்க் ரிசர்ச் அறிக்கை, அதிக கடன் வைத்திருக்கும் நிறுவனம் என்றும் வரி செலுத்துவதில் இருந்து தப்பிக்க "வரி ஏமாற்று புகலிடங்களை" பயன்படுத்தும் நிறுவனம் என்றும் அதானி குழுமத்தை விமர்சித்திருந்தது. மேலும், பங்குகளை கையாளுதல், கணக்கியல் மோசடி போன்ற குற்றச்சாட்டுகளும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதனால் கடந்த சில நாட்களாக அதானி குழுமத்தின் பங்குகள் வெகுவாக சரிவடைந்து வருகிறது. இந்த பிரச்சனையை அடுத்து, LIC முதலீட்டாளர்களுக்கு விளக்கம் அளிக்கும் விதமாக LIC இந்த அறிக்கையை வெளியிட்டிருக்கிறது. இதுகுறித்து பேசிய LIC நிர்வாக இயக்குநர் ராஜ்குமார், "உண்மை நிலை என்னவென்று எங்களுக்குத் தெரியவில்லை. நாங்கள் பெரிய முதலீட்டாளர் என்பதால் கேள்விகளைக் கேட்க எங்களுக்கு உரிமை உள்ளது. நாங்கள் நிச்சயமாக அவர்களுடன் கலந்தாலோசிப்போம்" என்று கூறியுள்ளார்.