அனைத்து சமுதாய மக்களையும் இணைத்து சமாதான கூட்டம் - உயர்நீதிமன்ற மதுரை கிளை
மதுரையில் உலக பிரசித்திப்பெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி இந்தாண்டு வரும் ஜனவரி 15ம்தேதி நடைபெறவுள்ளது. அவனியாபுரம் அம்பேத்கர் பகுதியில் ஆதிதிராவிடர் சமூகத்தை சேர்ந்த ஆயிரம் குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். பிற சமூகத்தினரும் இங்கு வசிக்கிறார்கள். கடந்த ஆண்டு நீதிமன்ற உத்தரவின் பேரில் அனைத்து சமூகத்தினரையும் ஒன்றிணைத்து குழு அமைக்கப்பட்டு ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டது. ஆனால் இந்தாண்டு குறிப்பிட்ட சமூகத்தினர் அடங்கிய குழு மட்டும் ஜல்லிக்கட்டு போட்டியினை நடத்தும் சூழல் அங்கு நிலவுகிறது. இதனையடுத்து அவனியாபுரத்தை சேர்ந்த முனியசாமி, கல்யாணசுந்தரம் ஆகியோர் மதுரை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றினை தாக்கல்செய்தனர். அதில், "ஆதிதிராவிடர் சமூகம் இங்கு புறக்கணிக்கப்படுகிறார்கள். இது சரியல்ல, எனவே கடந்தாண்டுபோலவே, இந்தாண்டும் அனைத்து சமுதாய மக்களும் இணைந்து ஜல்லிக்கட்டு நடத்த உத்தரவிடவேண்டும்" என்று குறிப்பிட்டிருந்தது.
மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடத்த உத்தரவு
இந்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் விஜயகுமார் மற்றும் கிருஷ்ணகுமார் அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அவனியாபுரத்தை சேர்ந்த அனைத்து மக்களையும் ஒன்றாக இணைத்து நாளை மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். அந்த கூட்டத்தில் சுமூகமான முடிவு ஏற்பட்டால், அனைத்து சமூக மக்களும் இணைந்து ஆலோசனை குழு உருவாக்கி ஜல்லிக்கட்டு போட்டியை நடத்தலாம் என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் அவனியாபுரத்தில் அனைத்து சமுதாய மக்களும் இணைந்து நடத்தும் ஜல்லிக்கட்டு போட்டியில் ஏதேனும் சட்ட, ஒழுங்கு பிரச்சனை ஏற்பட்டால், மாவட்ட நிர்வாகம் உடனே தலையிட்டு, போட்டியை தலைமை ஏற்று நடத்தும் என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.