ஜார்க்கண்ட் முதல்வராக ஹேமந்த் சோரன் இன்று பதவியேற்கிறார்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்கிறார்
ஜார்கண்ட் மாநிலத்தின் 14-வது முதல்வராக ஹேமந்த் சோரன் இன்று நவம்பர் 28 வியாழக்கிழமை ராஞ்சி மொராபாடி மைதானத்தில் நடைபெறும் பிரமாண்ட விழாவில் பதவியேற்கிறார். இந்த நிகழ்வில் பல அரசியல் தலைவர்கள் பங்கேற்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக முதல்வர் சார்பாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று மாலை 4 மணிக்கு நடைபெறும் பதவியேற்பு நிகழ்ச்சியில் ஹேமந்த் சோரனுக்கு ஆளுநர் சந்தோஷ் குமார் கங்வார் பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார். இன்று ஹேமந்த் சோரன் மேடும் தனியாக பதவியேற்பார் என்றும், சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்புக்குப் பிறகு தனது அமைச்சரவையை விரிவுபடுத்துவார் என்றும் கூறினார்.
நான்காவது முறையாக முதல்வராகிறார் ஹேமந்த் சோரன்
சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் 39,791 வாக்குகள் வித்தியாசத்தில் பிஜேபியின் கம்லியேல் ஹெம்ப்ரோமை தோற்கடித்து பர்ஹைத் தொகுதியில் இருந்து வெற்றி பெற்ற பிறகு, மாநிலத்தின் முதலமைச்சராக சோரன் நான்காவது முறையாக பதவியேற்கிறார். 81 உறுப்பினர்களைக் கொண்ட சட்டசபையில் சோரனின் ஜேஎம்எம் தலைமையிலான கூட்டணி 56 இடங்களைப் பெற்றது, அதே நேரத்தில் பாஜக தலைமையிலான என்டிஏ 24 இடங்களை மட்டுமே பெற முடிந்தது. ஹேமந்த் சோரன் பதவியேற்பு விழாவில் காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, NCP (SP) தலைவர் சரத் பவார், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, கர்நாடக துணை முதல்வர் டிகே சிவக்குமார் உள்ளிட்ட பல தலைவர்கள் கலந்துகொள்ளவிருக்கின்றனர்.