தமிழகத்தில் வரும் 22ம் தேதி முதல் 24ம் தேதி வரை கனமழை - வானிலை ஆய்வு மையம்
வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என்று ஏற்கனவே வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டிருந்தது. அதன்படி குறிப்பிட்ட அந்த மாநிலங்களில் பரவலான மழை தொடர்ந்து பெய்து வருகிறது. இந்நிலையில், கன்னியாகுமாரி மாவட்டத்தின் கடற்பகுதியில் நிலவி வரும் வளிமண்டல கீழடுக்கு சூழற்சி காரணமாக வரும் 22ம் தேதி முதல் 24ம் தேதி வரை தமிழகத்தின் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதே சமயம், தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் இன்று(நவ.,20) அடுத்த 5 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.
வடகிழக்கு பருவமழை இந்தாண்டு 16% குறைவு
மேலும் தமிழகத்தில் இந்தாண்டு வடகிழக்கு பருவமழை இன்று(நவ.,20) காலை நிலவரம் வரையில் 16% குறைவாக பெய்துள்ளதாகவும் வானிலை அறிக்கை தெரிவித்துள்ளது. அக்டோபர் மாதம் 1ம் தேதி முதல் தற்போது வரை 302.1 மி.மீ.மழை பதிவாகியிருக்க வேண்டிய நிலையில், 254.6மி.மீ. மழை மட்டுமே பதிவாகியுள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது. இதனிடையே தமிழ்நாடு மாநிலத்தில் அதிகபட்சமாக கடந்த 24 மணிநேரத்தில் தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினத்தில் 16 செ.மீ., மழையும், சாத்தான்குளம் பகுதியில் 12 செ.மீ., மழையும், திருச்செந்தூரில் 11 செ.மீ., மழையும் பதிவாகியுள்ளது என்றும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.