தமிழகத்தின் தென்மாவட்டங்களில் மீண்டும் கனமழை எச்சரிக்கை
தமிழ்நாடு மாநிலத்தின் தென்மாவட்டங்களான தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கடந்த 16, 17 மற்றும் 18ம்.,தேதிகளில் அதிகனமழை கொட்டித்தீர்த்தது. குறிப்பாக தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் வரலாறு காணாத அளவில் மழை பெய்ததால் வெள்ளம் சூழ்ந்து பெரும் பாதிப்புகள் நேர்ந்தது. தற்போது தான் மெல்லமெல்ல இயல்பு நிலை திரும்புகிறது. இந்நிலையில் மீண்டும் டிசம்பர் 31 மற்றும் ஜனவரி.1ம்.,தேதிகளில் தூத்துக்குடி, திருநெல்வேலி உள்ளிட்ட தென்மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக வரும் இன்று(டிச.,28)தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள் மற்றும் உள்மாவட்டங்களின் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்றும் கூறப்பட்டுள்ளது.
சென்னையை பொறுத்தவரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும்
இதனை தொடர்ந்து வரும் 31ம் தேதி மற்றும் 1ம் தேதி தென்மாவட்டங்களின் ஒருசில இடங்களிலும், வடதமிழகத்தின் ஓரிரு பகுதிகளிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமானது வரையில் மழை பெய்யக்கூடும். தொடர்ந்து, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் அடுத்த 48 மணிநேரத்திற்கு மேக மூட்டத்துடன் காணப்படும் என்றும், ஒரு சில பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இங்கு குறைந்தபட்ச வெப்பநிலை 23-24 டிகிரி செல்ஸியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 30-31 டிகிரி செல்ஸியஸாகவும் பதிவாகக்கூடும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.