
தமிழகத்தின் தென் மாவட்டங்களில் வெளுத்துவங்கும் கனமழை: பொதுவிடுமுறை அறிவிப்பு
செய்தி முன்னோட்டம்
குமரிகடல் மற்றும் இலங்கையை ஒட்டி உள்ள பகுதியில் நிலவி வரும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தின் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் பலத்த மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்து இருந்தது.
அதன்படி கடந்த இரு தினங்களாக அம்மாவட்டங்களில் வரலாறு காணாத அதிகனமழை பெய்து வருகிறது.
அணைகளில் நீர் நிரம்பி, அபாய கட்டத்தை நெருங்கி வருவதால், அங்கிருந்து உபரி நீர் திறந்து விடப்பட்டுள்ளது.
திருநெல்வேலி மருத்துவமனையில் வெள்ள நீர் புகுந்ததாக சமூகவலைத்தளத்தில் வீடியோக்கள் வைரலாகி வருகின்றன.
இதனையடுத்து தென்மாவட்டங்களுக்கு ரெட்-அலர்ட் விடப்பட்டுள்ளது.
அடுத்த 7 நாட்களில் மகப்பேறு தேதி குறிக்கப்பட்டுள்ள 24 கர்ப்பிணி பெண்களை முன்னெச்சரிக்கையாக மாற்று மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாக திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
card 2
பள்ளிகளுக்கும், கல்லூரிகளுக்கும் விடுமுறை
தொடர் கனமழையால் விருதுநகர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கும், கல்லூரிகளுக்கும் மற்றும் சிவகங்கை மாவட்டத்திலுள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி ஆகிய நான்கு மாவட்டங்களில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக, பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மாவட்டங்களில் ரயில் தண்டவாளங்களில் மழை நீர் தேங்கி உள்ளதால், ரயில் போக்குவரத்தும் நிறுத்தப்பட்டுள்ளது.
குறிப்பாக சென்னை - திருநெல்வேலி இடையேயான வந்தே பாரத் ரயில் சேவை இரு மார்க்கங்களிலும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல, திருச்செந்தூர் - பாலக்காடு, நெல்லை - ஜாம் நகர் இடையே இயக்கப்படும் ரெயில்களும், நிஜாமுதீன் - கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயில், முத்துநகர் நகர் மற்றும் சென்னை- திருச்செந்தூர் விரைவு ரயில்களும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது