தகிக்கும் இந்தியா! 44 டிகிரி செல்சியஸ் வெப்பத்தில் வட மாநிலங்கள்
செய்தி முன்னோட்டம்
இந்தியாவின் வட மற்றும் கிழக்குப் பகுதிகளில் கோடை வெயில் அதன் உச்சத்தைத் தொட்டுள்ளது. இன்று, மதிய நிலவரப்படி, உத்தரப் பிரதேசம், பீகார் மற்றும் மகாராஷ்டிராவின் பல நகரங்களில் வெப்பநிலை 44°C-ஐத் தாண்டியுள்ளது. இந்திய வானிலை ஆய்வு மையம்(IMD), வரும் நாட்களில் இந்த வெப்ப அலை மேலும் தீவிரமடையும் என எச்சரித்துள்ளது. உத்தரப் பிரதேசம் மற்றும் பீகாரில் உள்ள கங்கைச் சமவெளிப் பகுதிகள் மிகக் கடுமையான வெப்பத் தாக்கத்திற்கு உள்ளாகியுள்ளன. இன்று மதியம் 1 மணி நிலவரப்படி கீழ்க்கண்ட நகரங்களில் 44°C பதிவாகியுள்ளது. உத்தரப் பிரதேசம்: மிர்சாபூர், முகல்சராய், அலகாபாத், வாரணாசி, காசிப்பூர். பீகார்: சசாராம், தியோ மகாராஷ்டிரா: விதர்பா பிராந்தியத்தில் உள்ள அகோலா உலகின் வெப்பமான நகரங்களில் ஒன்றாகத் தொடர்ந்து நீடிக்கிறது.
டெல்லி
டெல்லிக்கு மஞ்சள் எச்சரிக்கை
தலைநகர் டெல்லியில் இன்று வெப்ப அலை வீசக்கூடும் என்பதால் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இன்று வெப்பநிலை 42°C முதல் 44°C வரை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இரவு நேரங்களிலும் வெப்பம் குறையாமல் 26°C-க்கு மேல் நீடிப்பதால், மக்கள் போதிய ஓய்வெடுக்க முடியாமல் உடல்நலப் பாதிப்புகளுக்கு உள்ளாகும் அபாயம் அதிகரித்துள்ளது.
தமிழகம்
தமிழகத்தின் நிலை: ஈரப்பதமான வெப்பம்
நேற்று தமிழகத்தில் 85.11% வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில், மக்கள் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் வாக்களித்தனர். நேற்று வேலூரில் 40.7°C பதிவாகியுள்ளது. தருமபுரி, நாமக்கல், திருத்தணி போன்ற இடங்களில் 38°C முதல் 40°C வரை வெப்பநிலை நிலவுகிறது. சென்னை போன்ற கடலோர நகரங்களில் வெப்பநிலை சற்றே குறைவாக இருந்தாலும், அதிகப்படியான ஈரப்பதம் காரணமாக வெயிலின் தாக்கம் அதிகமாக உணரப்படுகிறது. வானிலை ஆய்வு மையத்தின் கணிப்புப்படி, வடமேற்கு மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் ஆங்காங்கே இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது. தென்னிந்தியாவில் கேரளா மற்றும் தமிழகத்தின் தென் மாவட்டங்களில் (கன்னியாகுமரி, திருநெல்வேலி) லேசான மழை பெய்யக்கூடும். இருப்பினும், இந்த மழையினால் ஒட்டுமொத்த வெப்பம் குறைய வாய்ப்பில்லை.