டெல்லி மாணவர் தற்கொலை: தலைமை ஆசிரியை உட்பட 4 பேர் சஸ்பெண்ட்
செய்தி முன்னோட்டம்
டெல்லியில் உள்ள செயின்ட் கொலம்பா பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்த மாணவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக, பள்ளி ஊழியர்கள் நான்கு பேர் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். முன்னதாக 16 வயது மாணவர் மெட்ரோ ரயிலுக்கு முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார். இறப்பதற்கு முன்னதாக சிறுவன் ஒரு கடிதத்தில் ஆசிரியர்களின் பெயரை குறிப்பிட்டு, அவர்கள் மனரீதியாக துன்புறுத்தப்பட்டதாகக் குற்றம் சாட்டி, தனது குடும்பத்தினரிடம் மன்னிப்புகேட்டு, தனது உறுப்புகளை தானம் செய்யுமாறு கேட்டுக்கொண்டதாக புலனாய்வாளர்கள் தெரி வித்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், தலைமை ஆசிரியை, 9 மற்றும் 10 ஆம் வகுப்புகளுக்கான ஒருங்கிணைப்பாளர் மற்றும் இரண்டு ஆசிரியர்கள் உட்பட நான்கு பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
வழக்கு
சேட்டை செய்ததற்காக சிறுவனை கண்டித்த ஆசிரியர்கள்
இந்த வழக்கில் தற்கொலைக்குத் தூண்டுதல் பிரிவின் கீழ் FIR பதிவு செய்யப்பட்டுள்ளது. முன்னதாக சிறுவனின் தொடர்ச்சியான புகார்களை அடுத்து, அவனை வேறு பள்ளிக்கு மாற்ற குடும்பத்தினர் திட்டமிட்டிருந்தனர். "பரீட்சை முடிய இன்னும் 10 நாட்களே உள்ளன, அதன் பிறகு வேறு பள்ளிக்கு மாற்றிவிடலாம் என்று மகனுக்கு உறுதி அளித்திருந்தோம். அவனும் சம்மதித்திருந்தான்," என்று தந்தை கூறினார். ஆனால், மூன்று நாட்களுக்கு முன்பு, ஒரு ஆசிரியர் மாணவரிடமும், பெற்றோரிடமும் அவர் பள்ளியில் இருந்து வெளியேற்றப்படுவார் என்று தெரிவித்திருக்கிறார். இந்த செய்தி மாணவரை ஆழமாகப் பாதித்து மன உளைச்சலுக்கு ஆளாக்கியுள்ளது என அவரின் தந்தை கூறினார். கல்வித் துறை இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்த ஒரு குழுவை அமைத்துள்ளது.