பதவி விலகுகிறார் மகாராஷ்டிரா ஆளுநர் பி.எஸ்.கோஷ்யாரி
சத்ரபதி சிவாஜி குறித்த தனது கருத்துகளுக்காக சமீபத்தில் எதிர்க்கட்சி மற்றும் ஆளும் பாஜகவின் விமர்சனத்திற்கு ஆளான மகாராஷ்டிரா ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி, இன்று(ஜன 23) "அரசியல் பொறுப்புகளில் இருந்து விலக விரும்புகிறேன்" என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். மகாராஷ்டிரா ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில், 80 வயதான ஆளுநர் கோஷ்யாரி, இனி தனது வாழ்நாள் முழுவதையும் வாசிப்பு, எழுதுதல் போன்ற அமைதியான செயல்களில் செலவிட விரும்புவதாக தெரிவித்துள்ளார். "புனிதர்கள், சமூக சீர்திருத்தவாதிகள் மற்றும் வீரம் மிக்க போராளிகளின் பூமியான மகாராஷ்டிராவில் ராஜ்ய சேவக் அல்லது ராஜ்யபாலாக பணியாற்றியது எனக்கு கிடைத்த மரியாதை மற்றும் பாக்கியம்" என்று கோஷ்யாரி கூறி இருக்கிறார்.
மகாராஷ்டிரா ஆளுநர் வெளியிட்ட அறிக்கை
பிரதமர் நரேந்திர மோடியின் சமீபத்திய மும்பை பயணத்தின் போது, தான் மகாராஷ்டிரா ஆளுநர் பதவியில் இருந்து விலக விருப்பம் தெரிவித்ததாக கோஷ்யாரி கூறி இருக்கிறார். "கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக மகாராஷ்டிர மக்களிடம் இருந்து நான் பெற்ற அன்பையும் பாசத்தையும் என்னால் மறக்கவே முடியாது. சமீபத்தில் பிரதமர் மும்பைக்கு வந்த போது, அனைத்து அரசியல் பொறுப்புகளிலிருந்தும் விலக விரும்புவதாக அவரிடம் தெரிவித்தேன். மேலும், இனி எனது வாழ்நாள் முழுவதையும் வாசிப்பு, எழுதுதல் போன்ற அமைதியான செயல்களில் செலவிட விரும்புகிறேன். பிரதமரிடம் இருந்து நான் எப்போதும் அன்பையும் நேசத்தையும் பெற்றுள்ளேன். இந்த விஷயத்திலும் அதைப் பெறுவேன் என்று நம்புகிறேன்" என்று கோஷ்யாரி வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.