'தப்பு செய்தவர்கள் தப்பிக்க முடியாது': ஹத்ராஸ் உயிரிழப்புகளுக்கு போலே பாபா இரங்கல்
உத்தரப்பிரதேசம்: போலே பாபா என்று அழைக்கப்படும் சூரஜ் பால் சிங், ஹத்ராஸ் கூட்ட நெரிசல் சம்பவம் குறித்து ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், ஹத்ராஸ் கூட்ட நெரிசல் சம்பவத்தால் தான் மனச்சோர்வடைந்துள்ளதாகவும், பாதிக்கப்பட்ட குடும்பங்கள் நீதித்துறையின் மீது நம்பிக்கை வைக்குமாறும் அவர் கேட்டுக் கொண்டார். "இந்த சம்பவத்திற்குப் பிறகு நான் மிகவும் வருத்தமடைந்தேன். இந்த வலியைத் தாங்கும் சக்தியை கடவுள் எங்களுக்குத் தரட்டும். தயவுசெய்து அரசாங்கம் மற்றும் நிர்வாகத்தின் மீது நம்பிக்கை வையுங்கள். குழப்பத்தை உருவாக்கிய எவரும் தப்பிக்க மாட்டார்கள் என்று நான் நம்புகிறேன்." என்று போலே பாபா தனது வீடியோவில் தெரிவித்துள்ளார்.
முக்கிய குற்றவாளி கைது
இதற்கிடையில், ஜூலை 2 ஆம் தேதி 121 உயிர்களைக் கொன்ற ஹத்ராஸ் கூட்ட நெரிசல் சம்பவத்தின் முக்கிய குற்றவாளியான தேவ் பிரகாஷ் மதுகர், நேற்று இரவு டெல்லியில் காவல்துறையில் சரணடைந்தார். பின்னர் அவர் உத்தரபிரதேச காவல்துறையால் கைது செய்யப்பட்டார். அவர் இன்று உள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார். தேவ் பிரகாஷ் மதுகர் குறித்து தகவல் தருபவர்களுக்கு ரூ.1 லட்சம் பரிசு வழங்கப்படும் என உத்தரபிரதேச காவல்துறை முன்பு அறிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. ஜூலை 3 அன்று, ஹத்ராஸ் சம்பவம் குறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதியின் தலைமையில் மூன்று பேர் கொண்ட நீதித்துறை ஆணையத்தை மாநில அரசு அமைத்தது.