அரசியல் இருந்து ஓய்வு பெறுகிறாரா சோனியா காந்தி
"எனது இன்னிங்ஸ் இத்துடன் முடிவடைந்தது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது" என்று காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி உரையாற்றி உள்ளார். அவர் இத்துடன் அரசியலில் இருந்து ஓய்வு பெற இருக்கிறார் என்று கூறப்படுகிறது. "மன்மோகன் சிங்கின் திறமையான தலைமையுடன் 2004 மற்றும் 2009ஆம் ஆண்டுகளில் எங்களின் வெற்றிகள் தனிப்பட்ட மனநிறைவை அளித்தன. ஆனால் எனது இன்னிங்ஸ் பாரத் ஜோடோ யாத்திரையுடன் முடிவடைந்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. இது காங்கிரசுக்கு பெரும் திருப்புமுனையாக இருக்கும்" என்று அவர் கூறியுள்ளார். சத்தீஸ்கர் தலைநகர் ராய்பூரில் காங்கிரஸ் கட்சியின் மூன்று நாள் மாநாடு நடக்கிறது. இந்த மாநாட்டின் இரண்டாவது நாளான இன்று(பிப் 25) பேசிய சோனியா காந்தி இதை தெரிவித்திருக்கிறார்.
வெறுப்பு தீயை தூண்டும் பாஜக: சோனியா காந்தி
"இது காங்கிரசுக்கும், ஒட்டுமொத்த நாட்டிற்கும் சவாலான நேரமாகும். பாஜக-ஆர்எஸ்எஸ் நாட்டில் உள்ள ஒவ்வொரு நிறுவனத்தையும் கைப்பற்றி நாசமாக்கியுள்ளது. ஒரு சில தொழிலதிபர்களுக்கு மட்டும் சாதகமாக இருந்து பொருளாதார சீரழிவை ஏற்படுத்தியுள்ளது." என்று பாஜக குறித்து பேசிய அவர், "வெறுப்பு தீயை தூண்டும் பாஜக, சிறுபான்மையினர், பெண்கள், தலித்துகள், பழங்குடியினர் ஆகியோரை குறிவைத்து கொடூரமாக தாக்குகிறது. பாஜக ஆட்சியை நாம் வீரியத்துடன் எதிர்கொள்ள வேண்டும். மக்களை நாம் சென்றடைய வேண்டும். நமது செய்தியை அவர்களிடம் தெளிவுடன் தெரிவிக்க வேண்டும்." என்று கூறியுள்ளார். சோனியா காந்தி இன்று உரையாற்றியதை வைத்து அவர் அரசியலில் இருந்து இத்துடன் ஓய்வு பெற இருக்கிறார். அதை தான் அப்படி தெரிவிக்கிறார் என்று செய்திகள் வெளியாகி இருக்கின்றன.