தென்மாவட்ட பள்ளிகளுக்கு ஜனவரி 2ம் தேதி அரையாண்டு தேர்வு நடத்தப்படும்-அன்பில் மகேஷ்
கடந்த 17 மற்றும் 18ம் தேதிகளில் தமிழகத்தின் தென்மாவட்டங்களில் அதி கனமழை கொட்டித்தீர்த்தது. அதன் காரணமாக பல்வேறு இடங்களில் வெள்ளம் சூழ்ந்தது. கனமழை காரணமாக தென்மாவட்ட பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு தொடர்ந்து விடுமுறைகள் அறிவிக்கப்பட்டதோடு நடக்கவிருந்த அரையாண்டுத்தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், இத்தேர்வு நடத்துவது குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று(டிச.,26)செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்துள்ளார். அவர் கூறியதாவது, 'தென்மாவட்டங்களில் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு நகல் சான்றிதழ், புதிய பாடப்புத்தகங்கள் உள்ளிட்டவை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதேபோல், ஜனவரி.2ம்.,தேதி பள்ளிகள் திறக்கப்படும் பொழுது அரையாண்டு தேர்வு நடத்தப்படும்' என்று தெரிவித்தார். தொடர்ந்து, 6 முதல் 9ம் வகுப்பு பயிலும் அரசு பள்ளி மாணவர்களுக்கு குளிர்கால சிறப்பு பயிற்சி முகாம் நடத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.