ஹல்த்வானி வன்முறை: 5 பேர் கைது, 5,000 பேர் மீது வழக்கு, மாஜிஸ்திரேட் விசாரணைக்கு உத்தரவு
கடந்த வியாழன் அன்று உத்தரகாண்ட் மாநிலம் ஹல்த்வானியில் நடந்த வன்முறை தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் பலர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அந்த வன்முறையில் 5 பேர் உயிரிழந்ததை உறுதி செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. விசாரணைகள் முன்னேற்றமடைந்த நிலையில், இந்த வழக்கை மாஜிஸ்திரேட் விசாரிக்க மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. "அடையாளம் தெரியாத 5,000 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர், மேலும் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்" என்று ஹல்த்வானி, எஸ்எஸ்பி நைனிடால் பிஎன் மீனா தெரிவித்துள்ளார். சட்டவிரோதமாக கட்டப்பட்ட மதரஸாவை இடித்ததால் ஏற்பட்ட வன்முறையில் 5 பேர் உயிரிழந்தனர்.
பதிவு செய்யப்பட்ட 3 வழங்குகளில் 16 பேர் பெயர்கள் உள்ளன
நகராட்சி ஊழியர்கள் மற்றும் காவல்துறை மீது உள்ளூர்வாசிகள் கற்கள் மற்றும் பெட்ரோல் குண்டுகளை வீசியதால் 100 க்கும் மேற்பட்ட போலீசார் காயமடைந்தனர். பல காவலர்கள் காவல் நிலையத்தில் தஞ்சம் அடைய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. பின்னர் அந்த காவல்நிலையத்தின் மீது தீ வைக்கப்பட்டது. தற்போதைய சூழ்நிலை குறித்து கருத்து தெரிவித்த சட்டம் மற்றும் ஒழுங்கு ஏ.டி.ஜி., ஏ.பி.அன்ஷுமன், "பதிவு செய்யப்பட்ட 3 எஃப்.ஐ.ஆர்.களில் 16 பேர் பெயர்கள் உள்ளன, அவர்களில் 5 பேர் கைது செய்யப்பட்டனர். பன்பூல்புரா தவிர மற்ற பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டது." என்று தெரிவித்துள்ளார். கலவரம் தொடர்பான விசாரணைகள் நடைபெற்று வருவதால், பன்பூல்புரா பகுதிக்குள் வெளியாட்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை.