சச்சின் டெண்டுல்கரின் காவலாளி தன்னைத்தானே சுட்டுக் கொண்டு தற்கொலை
கிரிக்கெட் ஜாம்பவான் பாரத ரத்னா சச்சின் டெண்டுல்கரின் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த மாநில ரிசர்வ் போலீஸ் படை வீரர்(எஸ்ஆர்பிஎஃப்) ஜாம்னர் நகரில் உள்ள அவரது சொந்த வீட்டில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டதாக அதிகாரி ஒருவர் இன்று தெரிவித்தார். அந்த நபர் பிரகாஷ் கப்டே என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர் தனது பூர்வீக கிராமத்திற்கு ஒரு குறுகிய விடுமுறைக்காக சென்றிருந்த போது இந்த சம்பவம் நடந்துள்ளது. கப்டே(39) தனது சர்வீஸ் துப்பாக்கியால் கழுத்தில் தன்னைத்தானே சுட்டுக் கொண்டு உயிரிழந்தார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு வயதான பெற்றோர், மனைவி மற்றும் இரண்டு மைனர் குழந்தைகள், ஒரு சகோதரர் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள் உள்ளனர்.
கப்டேவின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது
இன்று அதிகாலை 1:30 மணியளவில் பாதிக்கப்பட்டவரின் வீட்டில் இந்த சம்பவம் நிகழ்ந்ததாகவும், தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் ஜாம்னர் காவல் நிலையத்தின் மூத்த காவல் ஆய்வாளர் கிரண் ஷிண்டே தெரிவித்தார். "முதற்கட்ட விசாரணைகளின்படி, சில தனிப்பட்ட காரணங்களுக்காக இந்த தீவிர நடவடிக்கையை எடுத்திருக்கலாம். ஆனால் விசாரணையின் முழு விவரங்களுக்காக நாங்கள் காத்திருக்கிறோம்," என்று திரு ஷிண்டே செய்தி நிறுவனமான ஐஏஎன்எஸ் இடம் கூறியுள்ளார். கப்டேவின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. ஜாம்னர் போலீசார் அவருடைய மரண அறிக்கையை பதிவு செய்துள்ளனர். மேலும் அவரது குடும்ப உறுப்பினர்கள், சகாக்கள் மற்றும் அவருக்கு தெரிந்தவர்களிடம் விசாரணை நடத்தப்பட உள்ளது.