
இந்தியாவில் அதிகரிக்கும் வயதானவர்களின் எண்ணிக்கை, வெளியானது இந்திய முதுமை அறிக்கை!
செய்தி முன்னோட்டம்
2023ம் ஆண்டு 'இந்திய முதுமை அறிக்கை'யை வெளியிட்டிருக்கிறது ஐநா மக்கள்தொகை நிதியம். மக்கள் தொகை அறிவியலுக்கான சர்வதேச நிறுவனத்துடன் இணைந்து இந்த அறிக்கையை தயாரித்திருக்கிறது அந்த அமைப்பு.
அந்த அறிக்கையில், 2050ம் ஆண்டு இந்தியாவில் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கையை விட 60 வயதுக்கு மேற்பட்ட வயதானவர்களின் மக்கள் தொகை அதிகரிக்கும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
தற்போது இந்தியாவில் 65% மக்கள் தொகையானது 35 வயதுக்குட்பட்டு இருக்கிறது. இந்தியாவின் இளம் மக்கள் தொகையே இந்தியாவின் வளமாகப் பார்க்கப்படுகிறது.
ஆனால், அடுத்த சில பத்தாண்டுகளில் இந்த நிலை மாறும் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தியாவில் வயதான மக்கள் தொகையானது மிக வேகமாக அதிகரித்து வருவதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தியா
எவ்வளவு உயரவிருக்கிறது வயதான மக்கள் தொகை?
கடந்த 2022ம் ஆண்டு ஜூலை 1 நிலவரப்படி, இந்தியாவில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களின் எண்ணிக்கையானது, மொத்த மக்கள்தொகையில் 10.5% ஆக இருக்கிறது.
2050ம் ஆண்டிற்குள் இது 20.8% ஆக உயரும் என கணிக்கப்பட்டிருக்கிறது. மேலும், இந்த நூற்றாண்டின் முடிவிற்குள் இந்தியாவின் வயதான மக்கள் தொகையானது 36% ஆக உயரும் எனவும் கணக்கிடப்பட்டிருக்கிறது.
இதுமட்டுமின்றி, இதே காலக்கட்டத்தில் 15 முதல் 59 வயதுக்குட்பட்ட மக்கள் தொயைும் சற்று சரிவைச் சந்திக்கும் என அந்த ஐநா அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், 40% முதியவர்கள் தினசரி வாழ்க்கைக்குக் கூட சிரமப்படும் அளவிற்கு மிகவும் ஏழ்மை நிலையில் இருப்பதாகவும் இந்திய முதுமை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.