குன்னூர் சிம்ஸ் பூங்காவில் பூத்து குலுங்கும் பச்சை ரோஜா
குன்னூர்-நீலகிரி மாவட்டத்திலுள்ள சுற்றுலா மையங்களில் முக்கியத்துவம் வாய்ந்த இடமாக கருதப்படுவது குன்னூர் சிம்ஸ் பூங்கா. ஒவ்வொரு ஆண்டும் இங்கு கோடை காலங்களில் பழக்கண்காட்சி நடத்தப்படுவதும் வழக்கம். சீசன் நாட்களை தவிர்த்து மற்ற நாட்களில் நாளொன்றுக்கு 500 முதல் 3,500 சுற்றுலாப்பயணிகள் இங்குவந்து செல்கிறார்கள் என்றும் கூறப்படுகிறது. இந்த பூங்காவில் நூற்றுக்கணக்கான அரியவகை மரங்கள், மலர் செடிகள் உள்ளிட்டவைகள் சிறந்த முறையில் பராமரிக்கப்பட்டு வருகிறது. அதனுள் பல வண்ணங்களில் பூக்கும் ரோஜா மலர்களும் அடங்கும். அதன்படி, கோடை சீசனில் நடக்கும் பழக்கண்காட்சிக்கு சிம்ஸ் பூங்காவில் பச்சைரோஜா நடவு செய்யப்பட்டிருந்த நிலையில் தற்போது பச்சை ரோஜாக்கள் அந்த பூங்காவில் பூத்துக்குலுங்க துவங்கியுள்ளது. இங்குவரும் சுற்றுலாப்பயணிகள் அதனை கண்டு ஆர்வமுடன் புகைப்படம் எடுத்து செல்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.