Page Loader
விலைவாசி உயர்வு: துவரம் பருப்பை வெளிச்சந்தைகளில் விற்க மத்திய அரசு முடிவு
மொத்த உள்நாட்டு தேவையை பூர்த்தி செய்யும் அளவு பருப்புகள் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படுவதில்லை

விலைவாசி உயர்வு: துவரம் பருப்பை வெளிச்சந்தைகளில் விற்க மத்திய அரசு முடிவு

எழுதியவர் Sindhuja SM
Jun 27, 2023
06:13 pm

செய்தி முன்னோட்டம்

இறக்குமதி செய்யப்படும் துவரம் பருப்புகள் இந்திய சந்தைக்கு வந்து சேரும் வரை தேசிய தானியக் களஞ்சியத்தில் இருக்கும் துவரம் பருப்பை வெளிச்சந்தைகளில் விற்க முடிவு செய்துள்ளதாக மத்திய உணவு அமைச்சகம் இன்று(ஜூன் 27) தெரிவித்துள்ளது. இறக்குமதி செய்யப்படும் துவரம் பருப்புகள் இன்னும் இந்திய சந்தைகளுக்கு வந்து சேராததால், இந்தியாவில் துவரம் பருப்பின் விலை கடுமையாக அதிகரித்துள்ளது. எல் நினோ வானிலை காரணமாகவும், பருவமழை இயல்பை விட 23% குறைவாக பதிவாகி இருப்பதாலும், இந்தியர்கள் அதிகம் பயன்படுத்தும் பருப்பு வகைகளின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால், துவரம் பருப்பு தற்போது 190 ரூபாய்க்கு மேல் விற்கப்படுகிறது. தேவை அதிமாகி விட்டதால் பதுக்கல்களும் அதிகமாகி இருக்கும் என்பதால் அரசாங்கம் இதற்கு எதிரான நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது.

பிஜேபி

 ஏலம் விடப்படும் துவரம் பருப்புகள் கணக்கிடப்பட்டு வெளியிடப்படும் 

இந்நிலையில், மத்திய அரசின் கையிருப்பில் இருக்கும் துவரம் பருப்பை ஆன்லைன் மூலம் ஏலம் விடும்படி தேசிய வேளாண் கூட்டுறவு சந்தைப்படுத்தல் கூட்டமைப்பு(NAFED) மற்றும் தேசிய கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பு(NCCF) ஆகிய கூட்டமைப்புகளுக்கு உணவு அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இப்படி ஏலம் விடப்படும் துவரம் பருப்புகள் கணக்கிடப்பட்டு வெளியிடப்படும் என்று மத்திய உணவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் பருப்புகள் அறுவடை செய்யப்பட்டாலும், அவை மொத்த உள்நாட்டு தேவையை பூர்த்தி செய்வதில்லை. எனவே, இந்தியா இந்த விஷயத்தில் இறக்குமதியை நம்பியுள்ளது. உணவுப் பொருட்களின் விலைகள் உயரும் பட்சத்தில் விநியோகத்தை அதிகரிக்க பருப்பு வகைகளை அரசாங்கம் எப்போதும் கையிருப்பில் வைத்திருக்கும். அந்த அரசாங்க கையிருப்பில் இருந்து தான் தற்போது துவரம் பருப்புகள் விற்பனை செய்யப்பட இருக்கிறது.