18,500 பொம்மைகள் பறிமுதல்: முகேஷ் அம்பானியின் நிறுவனத்தில் ரெய்டு
கடந்த இரண்டு வாரங்களில் நடத்தப்பட்ட 44 சோதனைகள் மூலம் நாடு முழுவதும் உள்ள பெரிய கடைகளில் 18,500 பொம்மைகள் அரசாங்கத்தால் பறிமுதல் செய்யபப்ட்டதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் கூறி இருக்கின்றன. இந்த பெரிய கடைகளில் முகேஷ் அம்பானிக்கு சொந்தமான ஹேம்லிஸ் மற்றும் ஆர்ச்சிஸ் ஆகிய கடைகளும் அடங்கும். BISஆல் வெளியிடப்பட்ட தர நெறிமுறைகளுக்கு இணங்காமல் பொம்மைகளை விற்பனை செய்ததற்காக இந்த பொம்மைகளை இந்திய தரநிலைகள் பணியகம்(BIS) கைப்பற்றியுள்ளது. இது தவிர, அமேசான், பிளிப்கார்ட், ஸ்னாப்டீல் ஆகிய மூன்று முக்கிய இ-காமர்ஸ் நிறுவனங்களுக்கு மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் (சிசிபிஏ) இதற்காக நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக செய்திகள் கூறுகின்றன.
தரக் கட்டுப்பாட்டு மீறல்
ஜனவரி 1, 2021 முதல், BIS தரக் கட்டுப்பாட்டு ஆணையத்தின் விதிமுறைகளுக்கு இணங்க பொம்மைகளை விற்க வேண்டும் என்பதை அரசு கட்டாயமாக்கியுள்ளது. BIS இயக்குநர் ஜெனரல் பிரமோத் குமார் திவாரி நேற்று(ஜன:12) செய்தியாளர்களிடம், "பொம்மை விற்பனையாளர்கள் மற்றும் தயாரிப்பாளர்களுக்கு எதிராக பல தரப்பிலிருந்தும் புகார்கள் வந்ததால் இந்த சோதனை நடத்தப்பட்டிருக்கிறது." என்று கூறி இருக்கிறார். ஹேம்லிஸ் மற்றும் ஆர்ச்சிஸ் தவிர, நாடு முழுவதும் உள்ள WH ஸ்மித், கிட்ஸ் சோன் மற்றும் கோகோகார்ட் ஆகிய கடைகளிலும் சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. இந்த சில்லறை விற்பனையாளர்கள் மீது சட்டபடி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் திவாரி தெரிவித்திருக்கிறார்.