இந்தியாவின் பிருத்வி-II ஏவுகணை சோதனை வெற்றி
அணு ஆயுதங்களை ஏந்தி செல்லும் ஏவுகணையான பிரித்வி-II இன் சோதனை வெற்றிபெற்றுள்ளது. ஒடிசாவின் கடற்கரையில் இருக்கும் சோதனை தளத்தில் இந்த ஏவுகணை சோதனை நேற்று(ஜன:10) இரவு நடத்தப்பட்டது. ஏவுகணை அதன் இலக்கை "அதிக துல்லியத்துடன்" தாக்கியதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்திருக்கிறது. "பிரித்வி-II என்ற குறுகிய தூர பாலிஸ்டிக் ஏவுகணையின் சோதனை ஜனவரி 10 ஆம் தேதி ஒடிசாவின் கடற்கரையில் உள்ள ஒருங்கிணைந்த சோதனைத் தளத்தில் மேற்கொள்ளப்பட்டது" என்று பாதுகாப்பு அமைச்சகத்தின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
வெற்றிகரமாக இலக்கைத் தாக்கிய பிருத்வி-II
" பிருத்வி-II ஏவுகணை இந்தியாவின் அணுசக்தி தடுப்பில் ஒரு பகுதியாகும். இந்த ஏவுகணை அதிக துல்லியத்துடன் அதன் இலக்கை தாக்கியது" என்று பாதுகாப்பு அமைச்சகம் அந்த அறிக்கையில் தெரிவித்திருக்கிறது. "பயனர் பயிற்சி ஏவுதல்" என்ற இந்த சோதனையின் மூலம் ஏவுகணையின் செயல்பாட்டு மற்றும் தொழில்நுட்ப அளவுருக்கள் வெற்றிகரமாக சரிபார்க்கப்பட்டுள்ளது. பிரித்வி-II ஏவுகணை சுமார் 350 கிலோமீட்டர் தூரம் வரை சென்று தாக்கும் திறன் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.