பிரதமர், ஜனாதிபதி தங்கும் விடுதியில் ஏழை மாணவியை தங்கவைத்தார் கவர்னர் ஆர்.என்.ரவி
தமிழ்நாடு மாநில ப்ளஸ் 2 தேர்வில் மாநில அளவில் 600க்கு 600 மதிப்பெண்கள் எடுத்து சாதனைப்படைத்த மாணவி நந்தினியை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் வரவழைத்து தனது வாழ்த்துக்கள் மற்றும் சிறு பரிசினையும் அளித்தார். தொடர்ந்து அவரின் உயர்கல்விக்கான செலவினை அரசு ஏற்கும் என்று உறுதியளித்தார். இதனையடுத்து ப்ளஸ் 2 தேர்வில் மாநில அளவில் அதிக மதிப்பெண்கள் எடுத்த அனைத்து மாணவ-மாணவியரையும் அழைத்து அவர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி ஒன்றினை தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி அவர்கள் நடத்தினார். இந்த நிகழ்ச்சியில் மாணவர்களின் விருப்பங்களை கேட்டறிந்த அவர், தன்னுடைய அறிவுரைகள் மற்றும் ஆலோசனைகளையும் வழங்கினார் என்று கூறப்படுகிறது.
ஏழை மாணவிக்காக விதிகளை தளர்த்தலாம் என்று கூறிய கவர்னர்
இந்த நிகழ்ச்சிக்காக தென்காசியிலிருந்து பெற்றோருடன் சென்னைக்கு வந்த ஷப்ரீன் இமானா, ராஜபவனில் பிரதமர், ஜனாதிபதி போன்ற முக்கிய பிரமுகர்கள் தங்கும் விருந்தினர் மாளிகையில் தங்க வைக்கப்பட்டுள்ளார். விதிமுறைகளின் படி விருந்தினர் மாளிகையில் தனி நபர்கள் தங்க அனுமதி இல்லை என்று ராஜபவன் அதிகாரிகள் கவர்னர் கவனத்திற்கு எடுத்து சென்றுள்ளார்கள். ஆனால் அதற்கு அவர், ப்ளஸ் 2 தேர்வில் மாநில அளவில் ரேங்க் பெற்ற ஏழை கூலித்தொழிலாளி குடும்பத்தினை சேர்ந்த மாணவி. தமிழ் வழியில் கல்விப்பெற்று சாதனை படைத்துள்ளார். இவருக்காக விதிமுறைகளை தளர்த்துவதில் தவறு ஏதும் இல்லை என்று கூறியுள்ளார். அதற்கு பின்னரே மாணவி ஷப்ரீன் இமானா குடும்பத்திற்காக ராஜபவனில் உள்ள விருந்தினர் மாளிகை திறக்கப்பட்டது என்று செய்திகள் தெரிவிக்கிறது.