2021 வரை 472 கைதிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது: மத்திய அரசு
2021 டிசம்பர் 31ஆம் தேதி வரை நாடு முழுவதும் உள்ள பல்வேறு சிறைகளில் இருக்கும் 472 கைதிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்தது என்று மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது. மேலும், 290 கைதிகளின் மரண தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் குமார் மிஸ்ரா தெரிவித்துள்ளார். அதிகமான மரண தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகள் உத்தரபிரதேச(67) சிறையில் இருக்கின்றனர் என்ற தகவலும் பகிரப்பட்டுள்ளது.
11 தமிழக கைதிகளுக்கு தண்டனை குறைப்பு
அதற்கு அடுத்தபடியாக, பீகாரில்-46, மகாராஷ்டிராவில்-44, மத்தியப் பிரதேசத்தில்-39, மேற்கு வங்கத்தில்-37, ஜார்கண்டில்-31 மற்றும் கர்நாடகாவில்-27 பேரும் அடைக்கப்பட்டுள்னர். தூக்குத் தண்டனை ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்ட 290 கைதிகளில் 46 பேர் மத்தியப் பிரதேசத்திலும், 35 பேர் மகாராஷ்டிராவிலும், 32 பேர் உத்தரப் பிரதேசத்திலும், 30 பேர் பீகாரிலும், கர்நாடகா மற்றும் மேற்கு வங்கத்தில் தலா 19 பேரும், குஜராத்தில் 18 பேரும் சிறை வைக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த 17 கைதிகளில், 11 பேருக்கு தண்டனை குறைக்கப்பட்டுள்ளது.