கொரோனா தடுப்பு: மருத்துவமனைகளுக்கு அதிரடி உத்தரவிட்ட தமிழக அரசு!
சீனா உள்ளிட்ட உலக நாடுகளில் கொரோனா அதிகரித்து வருவதால், இந்தியா முழுவதும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இது குறித்து, சில நாட்களுக்கு முன் தமிழக அரசு ஒரு ஆலோசனை கூட்டத்தை நடத்தியது. இதனையடுத்து, மருத்துவ கல்வி இயக்குநரகத்திற்கு தமிழக அரசு சில உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது. கொரோனாவுக்காக தமிழக அரசு பிறப்பித்திற்கும் உத்தரவுகள்: அரசு மருத்துவமனைகளில் கொரோனா பரிசோதனை செய்வதற்கும் கொரோனாவுக்கு உரிய சிகிச்சைகள் வழங்குவதற்கும் தேவையான மருத்துவ உபகரணங்களைத் தயாராக வைக்க வேண்டும். N95 முகக்கவசங்கள், பிபிஇ கிட், ஆக்சிஜன் செறிவூட்டிகள், மாதிரி சோதனைக் கருவிகள் ஆகிய அத்தியாவசிய பொருட்களைத் தயார்படுத்த வேண்டும். மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். தடுப்பூசி மையங்களும் தயாராக இருக்க வேண்டும்.
நாடு முழுவதும் கொரோனா ஒத்திகை!
கொரோனா பரவலை எதிர்கொள்ள நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பு ஒத்திகைகள் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. மத்திய சுகதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா இந்த ஒத்திகைகள் செய்வதற்கு அறிவுறுத்தியுள்ளார். இதை ஒவ்வொரு மாநிலத்தின் சுகாதார துறை அமைச்சர்களும் கண்காணிக்கின்றனர். அரசு மற்றும் அரசு சார்ந்த மருத்துவமனைகளில் போதிய வசதிகள், மெத்தைகள், ஆக்சிஜென் சிலிண்டர்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் சரியாக இருக்கிறதா என்பதையும் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் சரியாக எடுக்கப்பட்டுள்ளதா என்பதையும் மாநில சுகாதாரத்துறை அமைச்சர்கள் இன்று ஆய்வு செய்கின்றனர். டெல்லி சப்தர்ஜங் மருத்துவனையை மத்திய சுகதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா இன்று நேரில் சென்று ஆய்வு செய்கிறார். இந்த ஆய்வுகள் தமிழகம் உட்பட நாடு முழுவதும் உள்ள அனைத்து மாநிலங்களிலும் நடைபெற்று கொண்டிருக்கிறது.