கூகுளின் முன்னாள் உயர் அதிகாரியின் வைரல் ட்வீட்: நெகிழ்ச்சியில் இணையவாசிகள்
இரக்க குணம் உள்ளவர்களை சந்திப்பது அரிது. அதிலும் முகம் தெரியாதவர்களிடம் இரக்க குணத்தைக் காண்பது அதைவிட அரிது. அப்படி ஒருவரைக் கண்டால் அது வாழ்வின் மறக்க முடியாத ஒரு அனுபவம் ஆகிவிடும். அப்படி ஒரு அனுபவத்தைத் தான் கூகுளின் முன்னாள் அதிகாரி பர்மிந்தர்சிங் ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். தான் குழந்தையாக இருக்கும் போது தன் உயிரைக் காப்பாற்றிய ஒரு முகம் தெரியாத நபரை இந்த பதிவில் அவர் நினைவு கூர்ந்துள்ளார். "நான் சிறுவனாக இருந்தபோது, ஒரு முகம் தெரியாத நபர், ஒரு அம்பாசிடர் காரில் நசுங்கிவிடாமல் என்னைத் தூக்கி காப்பாற்றினார். அவரைப் பற்றி எனக்குத் தெரிந்ததெல்லாம் அவர் ஒரு வெள்ளிநிற HMT வாட்ச் அணிந்திருந்தார்என்பது மட்டுமே." என்று அவர் ட்விட்டரில் கூறி இருக்கிறார்.
மென்மையும் இரக்கமும் வலிமையின் வெளிப்பாடுகள் என்று கூறும் ஒரு ட்வீட்
இந்தோனேஷியா, பாலி விமான நிலையத்தில் ஒரு முகம் தெரியாத நபர் அவருக்கு உதவி செய்த ஒரு கதையையும் அவர் இந்த பதிவில் விவரித்திருக்கிறார். ஒருமுறை அவர் பாலி விமான நிலையத்தில் இருந்து கிளம்பும் போது புறப்படும் வரியை(departure tax) இந்தோனேசிய பணத்தில் கட்ட வேண்டி இருந்திருக்கிறது. ஆனால் அவரிடம் இந்தோனேஷிய பணம் கையில் இல்லை. அப்போது அவருக்கு பின்னால் வரிசையில் நின்று கொண்டிருந்த ஒரு பெண்மணி அவருக்கு அந்த பணத்தைக் கொடுத்து உதவி இருக்கிறார். இந்த நிகழ்ச்சியையும் நினைவு கூர்ந்த சிங், மிகவும் நெகிழ்ச்சி அடைந்தார். "கிரெடிட் கார்டு மூலம் அவர்களுக்கு ஏதாவது வாங்கித் தருகிறேன் என்று நான் வற்புறுத்தினேன். ஆனால், அவர் மறுத்துவிட்டார்." என்று அவர் வருத்தத்தோடு அந்த பதிவில் தெரிவித்திருக்கிறார்.