Page Loader
கோவா கடற்கரை உணவகங்களில் பாரம்பரிய மீன் குழம்பு-சோறு கட்டாய விற்பனை: மாநில அரசின் உத்தரவு
கோவா கடற்கரை உணவகங்களில் மீன் குழம்பு-சோறு : மாநில அரசின் உத்தரவு

கோவா கடற்கரை உணவகங்களில் பாரம்பரிய மீன் குழம்பு-சோறு கட்டாய விற்பனை: மாநில அரசின் உத்தரவு

எழுதியவர் Nivetha P
Oct 10, 2023
07:41 pm

செய்தி முன்னோட்டம்

கோவா கடற்கரை பகுதிகளில் அமைந்துள்ள சிறிய உணவகங்களில் பல்வேறு உணவு வகைகள் விற்பனை செய்யப்படும் நிலையில், அம்மாநில பிரசித்தி பெற்ற உணவான மீன் குழம்பும், சோறும் விற்கப்பட வேண்டும் என்று அம்மாநில அரசு உத்தரவு ஒன்றினை பிறப்பித்துள்ளது. கோவா மாநிலத்தின் வருவாயில் சுற்றுலா துறை மிகப்பெரிய பங்கு வகுத்து வருகிறது. அதன் காரணமாக அத்துறையினை மேம்படுத்த அந்த மாநில அரசாங்கம் பல்வேறு முயற்சிகளை தொடர்ந்து எடுத்து வருகிறது. அதன்படி அங்கு கோவா கடற்கரை பகுதியினை சுற்றி ஏராளமான சிறிய உணவகங்கள் மற்றும் மதுபான கூடங்கள் அமைந்துள்ளது. இந்த உணவகங்களில் மேற்கத்திய நாட்டின் உணவு வகைகளும், வடமாநில உணவு வகைகளும் அதிகளவில் விற்பனை செய்யப்படுவதாக கூறப்படுகிறது.

கோவா 

உள்ளூர் உணவுகளை ஊக்குவிக்கும் புது வரைமுறைகள் 

அதே சமயம், இந்த உணவகங்களில் கோவாவின் பாரம்பரிய உணவு வகைகள் எதுவும் விற்பனை செய்யப்படுவதில்லை என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில் உள்ளூர் உணவுகளை ஊக்குவிக்கும் வகையில் புதிய வரைமுறைகளை அந்த மாநில அரசு கொண்டு வந்துள்ளது. அதற்கு சமீபத்தில் அமைச்சரவை குழுவும் ஒப்புதல் அளித்துள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கிறது. இதுகுறித்து சுற்றுலாத்துறை அமைச்சர் ரோஹன் காவுட்னே வெளியிட்டுள்ள அறிக்கையில், 'கடற்கரை ஒட்டியுள்ள அனைத்து உணவகங்கள் மற்றும் மதுபான கூடங்களில் கோவாவின் பாரம்பரிய உணவு வகைகள் விற்கப்பட வேண்டும்' என்று தெரிவித்துள்ளார். மேலும் அதில், "குறிப்பாக தேங்காயினை பயன்படுத்தி செய்யப்படும் மாநிலத்தின் பிரசித்திப்பெற்ற மீன் குழம்பு மற்றும் சோறு நிச்சயம் அதில் இடம்பெற வேண்டும்" என்று கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.