Page Loader
கர்நாடகா: முஸ்லீம் மாணவர்களை பாகிஸ்தானுக்கு போக சொன்ன ஆசிரியை இடமாற்றம்
இச்சம்பவத்தைத் தொடர்ந்து, மஞ்சுளா தேவி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

கர்நாடகா: முஸ்லீம் மாணவர்களை பாகிஸ்தானுக்கு போக சொன்ன ஆசிரியை இடமாற்றம்

எழுதியவர் Sindhuja SM
Sep 03, 2023
02:39 pm

செய்தி முன்னோட்டம்

கர்நாடகாவின் ஷிவமொக்கா மாவட்டத்தில் பணிபுரியும் அரசுப் பள்ளி ஆசிரியை ஒருவர் முஸ்லீம் மாணவர்களுக்கு எதிராக வகுப்புவாதக் கருத்துக்களைத் தெரிவித்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். காரசாரமான கருத்துப் பரிமாற்றத்தின் போது மாணவர்களிடம் 'பாகிஸ்தானுக்குச் செல்லுங்கள். இது இந்துக்களின் நாடு.' என்று ஆசிரியை மஞ்சுளா தேவி கூறியதாகக் கூறப்படுகிறது. இச்சம்பவத்தைத் தொடர்ந்து, ஒன்பது ஆண்டுகளுக்கும் மேலாக அந்த பள்ளியில் கன்னட மொழியை கற்பித்து வந்த மஞ்சுளா தேவி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அந்த பள்ளியில் பயிலும் சில முஸ்லீம் மாணவர்கள் அவர் மீது முறையான புகார் அளித்ததை அடுத்து இந்த விஷயம் வெளிச்சத்திற்கு வந்தது.

ட்ஜகஃவ்

டெல்லி அரசு பள்ளியில் முஸ்லீம் மாணவர்களுக்கு எதிராக நடந்த சம்பவம் 

கூறப்பட்ட புகாருக்கு உறுதியான ஆதாரம் இல்லாத போதிலும், மாணவர்களின் புகார்களின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தொகுதி கல்வி அலுவலர் பி.நாகராஜ் உறுதிப்படுத்தியுள்ளார். இதே போன்ற ஒரு சம்பவம் டெல்லி அரசு பள்ளியிலும் சமீபத்தில் நடந்தது. டெல்லியின் சர்வோதயா பால் வித்யாலயாவில் பணிபுரிந்து வந்த ஹேமா குலாட்டி என்ற ஆசிரியை, வகுப்பறையில் வைத்து முஸ்லீம் மாணவர்களிடம், "பாகிஸ்தான் பிரிக்கப்பட்ட போது உங்களது குடும்பம் ஏன் அங்கு செல்லவில்லை" என்று கேட்ட விஷயம் சில நாட்களுக்கு முன்பு பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. மேலும், உத்தரபிரதேச மாநிலத்தில் ஒரு முஸ்லீம் சிறுவனை வகுப்பறையில் வைத்து அறையும்படி பிற மாணவர்களுக்கு ஒரு ஆசிரியை உத்தரவிட்ட சம்பவமும் சமீபத்தில் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.