Loading...
செஞ்சி அருகே பிறந்தநாள் அன்று மாயமான 7 வயது சிறுமி: 14 நாட்கள் கடந்தும் துப்பில்லை
சிபிசிஐடி போலீசார் பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர்

செஞ்சி அருகே பிறந்தநாள் அன்று மாயமான 7 வயது சிறுமி: 14 நாட்கள் கடந்தும் துப்பில்லை

எழுதியவர் Venkatalakshmi V
Oct 26, 2026
12:09 pm

செய்தி முன்னோட்டம்

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே பிறந்தநாள் கொண்டாடிய அன்றிரவே 7 வயது சிறுமி மாயமான விவகாரத்தில், 14 நாட்கள் கடந்தும் எந்தவிதத் துப்பும் கிடைக்காததால் சிபிசிஐடி போலீசார் பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர். ஆலம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்த வடிவேலு - பவானி தம்பதியரின் 7 வயது மகள் ஹேமலதா, கடந்த அக்டோபர் 11-ஆம் தேதி குடும்பத்தினருடன் பிறந்தநாளைக் கொண்டாடியுள்ளார். அன்றிரவு பெற்றோருடன் தூங்கச் சென்ற சிறுமி, மறுநாள் அதிகாலை திடீரென மாயமாகியுள்ளார். சத்தியமங்கலம் காவல்துறையினர் 10 தனிப்படைகள் அமைத்து கிணறுகள் மற்றும் காடுகளில் தேடியும் சிறுமி கிடைக்காததால், வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது.

விசாரணை

சிபிசிஐடி விசாரணையும் வலுக்கும் சந்தேகங்களும்

துணை காவல் கண்காணிப்பாளர் கீதா தலைமையிலான சிபிசிஐடி படை விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளது.

முந்தைய ஆண்டுகளில் கொண்டாடப்படாத பிறந்தநாள் இந்த ஆண்டு திடீரென கொண்டாடிய பின்னணி குறித்துப் பெற்றோரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

மேலும், அதிகாலையில் சிறுமியின் அழுகுரல் கேட்டதாக எதிர்வீட்டுப் பெண் கூறியுள்ளதால், கூச்சலிடாமல் இருக்க மயக்க ஸ்ப்ரே பயன்படுத்தி கடத்தப்பட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

சாமியார்

சாமியார் தலைமறைவு மற்றும் சிசிடிவி ஆய்வு

சிறுமி மாயமான அதே நாளிலிருந்து தஞ்சாவூரை சேர்ந்த சரவணன் என்ற சாமியார் தலைமறைவாகியுள்ளதால், அவர் மீதும் தனிப்படையின் கவனம் திரும்பியுள்ளது.

பேருந்து அல்லது காரில் சென்றால் சோதனையில் சிக்க நேரிடும் என்பதால் ரயிலைப் பயன்படுத்தியிருக்கலாம் என்ற கோணத்தில் விழுப்புரம், திண்டிவனம், புதுச்சேரி உள்ளிட்ட ரயில் நிலையங்களின் சிசிடிவி காட்சிகளைப் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

சிறுமியை பற்றித் தகவல் தருபவர்களுக்கு ₹2 லட்சம் சன்மானம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இரு வாரங்களாகியும் சிறுமியைக் கண்டுபிடிக்காததை கண்டித்து எதிர்கட்சியினர் போராட்டங்களை அறிவித்துள்ளதால் இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ADVERTISEMENT