மனைவியைக் கொன்றுவிட்டு, அவரது உடலுடன் 4 நாட்கள் வாழ்ந்த உத்தர பிரதேசத்தை சேர்ந்த நபர் கைது
செய்தி முன்னோட்டம்
உத்தர பிரதேச மாநிலம் காசியாபாத்தை சேர்ந்த 55 வயது நபர் ஒருவர் தன் மனைவியின் கழுத்தை நெரித்து கொன்றுவிட்டு, அவரது உடலுடன் 4 நாட்கள் வாழ்ந்திருக்கும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குற்றம் சாட்டப்பட்ட பரத் சிங் என்ற நபர், குடிபோதையில் நடந்த சம்பவத்தை அக்கம்பக்கத்தினரிடம் கூறியதை அடுத்து இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது.
அதன் பின்னர் அவரது வீட்டில் இருந்து அதிக துர்நாற்றம் வீசத் தொடங்கியதால் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தகவலின் பேரில் போலீஸார் சனிக்கிழமை சம்பவ இடத்துக்குச் சென்று சடலத்தைக் கைப்பற்றினர்.
அந்த சடலம் சுமார் 3 முதல் 4 நாட்கள் பழமையானது என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
உத்தர பிரதேசம்
குடும்ப தகராறினால் மனைவியை கொன்றதாக ஒப்புக்கொண்டார் பரத் சிங்
குற்றம்சாட்டப்பட்ட நபரின் படுக்கையறையில் இருந்து அவரது மனைவியின் உடல் கண்டெடுக்கப்பட்டது.
குற்றம் சாட்டப்பட்டவரை உடனடியாக கைது செய்த போலீசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தினர்.
விசாரணையின் போது, அவர் தனது 51 வயது மனைவி சுனிதாவை குடும்ப தகராறினால் கொலை செய்ததாக ஒப்புக்கொண்டார்.
சடலத்தை மீட்கும் போது அது ஏற்கனவே அழுக தொடங்கிவிட்டது என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
அந்த பெண்ணின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
போலீஸ் விசாரணையின் போது, சுனிதாவை சுமார் மூன்று ஆண்டுகளாக தனக்கு தெரியும் என்றும், அதன் பிறகு, இருவரும் சேர்ந்து வாழத் தொடங்கினோம் என்றும் பரத் சிங் கூறியுள்ளார்.
சுனிதாவின் முதல் கணவர் 2012 இல் இறந்துவிட்டார். பரத் விவாகரத்து செய்து கொண்டவர் ஆவார்.