சென்னையில் ஆளுநருக்கு எதிரான போஸ்டர்கள்
நேற்று, ஆண்டின் முதல் சட்டமன்ற கூட்டம் நடைபெற்றது. இதை, ஆளுநர் ஆர்.என். ரவி, தன் உரையுடன் தொடங்கி வைத்தார். அவர் உரையை வாசிக்கும் போது தமிழக அரசின் உரையில் குறிப்பிட்டிருந்த சில முக்கியமான வார்த்தைகளை தவிர்த்துவிட்டதாக ஆளுநர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இதை முதல்வர் ஸ்டாலின் தன் உரையின் போது சுட்டிக்காட்டினார். மேலும், இதற்கு எதிரான இரு தீர்மானத்தையும் நிறைவேற்றினார். அப்போது, முதல்வர் பேசி கொண்டிருக்கும் போதே ஆளுநர் பாதியில் வெளிநடப்பு செய்தார். இதனையடுத்து, "ரவி வெளியேறு"(#GetOutRavi) என்ற ஆளுநருக்கு எதிரான போஸ்டர்கள் இன்று சென்னை முழுவதும் ஒட்டப்பட்டுள்ளது.
ட்விட்டரில் ட்ரெண்ட் ஆகும் #GetOutRavi
மேலும், தமிழக ஆளுநருக்கு எதிரான #GetOutRavi என்ற ஹாஷ்டாக் ட்விட்டரில் இந்திய அளவில் ட்ரெண்ட் ஆகி கொண்டிருக்கிறது. திமுக மற்றும் திமுக கூட்டணி கட்சிகள் ஆளுநரை வெளியேற சொல்லி தொடர்ந்து ட்விட்டரில் பதிவு செய்து வருகின்றனர். அதிமுக, பாஜக போன்ற கட்சிகள் ஆளுநருக்கு ஆதரவான கருத்துக்களைத் தெரிவித்துள்ளனர். இதனால், தமிழக அரசியலில் பரபரப்பு சூழல் நிலவி வருகிறது.