அரசியல்வாதியாக மாறிய ரவுடி முக்தார் அன்சாரி மாரடைப்பால் மரணம்; யாரோ விஷம் வைத்துவிட்டதாக குற்றச்சாட்டு
செய்தி முன்னோட்டம்
உத்தரபிரதேசம்: சிறையில் அடைக்கப்பட்டிருந்த ரவ்டி-அரசியல்வாதி முக்தார் அன்சாரி (63) மாரடைப்பு காரணமாக வியாழக்கிழமை காலமானார்.
அவரது உடல்நிலை மோசமடைந்ததை அடுத்து அவர் உத்தரபிரதேச மாநிலம் பண்டா மாவட்டத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
அவர் வாந்தி எடுத்ததாக புகார் கூறியதையடுத்து, மயக்கமடைந்த நிலையில் அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
ஆனால், தனது தந்தைக்கு யாரோ ஸ்லோ பாய்சன் வைத்துவிட்டதாக அன்சாரியின் மகன் உமர் அன்சாரி குற்றம்சாட்டியுள்ளார்.
"இரண்டு நாட்களுக்கு முன்பு நான் அவரை சந்திக்க சென்றேன். ஆனால் என்னை சந்திக்க அனுமதிக்கவில்லை. மார்ச் 19 அன்று இரவு அவரது உணவில் விஷம் கலந்துவிட்டனர். நாங்கள் நீதித்துறைக்கு செல்வோம்." என்று உமர் அன்சாரி கூறியுள்ளார்.
உத்தரபிரதேசம்
அன்சாரியின் மரணத்தை தொடர்ந்து உத்தரபிரதேசத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது
பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு அன்சாரியின் உடலை குடும்பத்தினர் பெற்றுக் கொண்டதும் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
கடந்த செவ்வாயன்று, அன்சாரியின் சகோதரரும் காஜிபூர் நாடாளுமன்ற உறுப்பினருமான அப்சல் அன்சாரியும், முக்தார் அன்சாரிக்கு சிறையில் "ஸ்லோ பாய்சன்" கொடுக்கப்படுவதாகக் குற்றம் சாட்டினார். அந்த குற்றச்சாட்டை அதிகாரிகள் மறுத்துள்ளனர்.
அன்சாரியின் உடல் பண்டா மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
பிரேத பரிசோதனைக்காக ஐந்து டாக்டர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டதாக உமர் கூறியுள்ளார்.
பின்னர் அவர் பண்டாவில் உள்ள ராணி துர்காவதி மருத்துவக் கல்லூரிக்கு மாற்றப்பட்டார்.
2023 டிசம்பரில், மாநில அரசு தன்னை பண்டா சிறையில் படுகொலை செய்யத் திட்டமிட்டுள்ளதாகக் கூறி உமர் உச்ச நீதிமன்றத்தை அணுகினார் என்பது குறிப்பிடத்தக்கது.