ஜி20 உச்சி மாநாடு - 500 வகை உணவுகள் தயாரிக்க ஏற்பாடுகள் தீவிரம்
சர்வதேச அளவிலான ஜி20 மாநாடு இந்தாண்டு இந்தியா தலைமையில் நடக்கிறது. அதன்படி, வரும் 9 மற்றும் 10ம் தேதிகளில் நடக்கவுள்ள இந்த மாநாட்டில் பங்கேற்க உலகநாடுகளின் தலைவர்கள் இந்தியாவிற்கு வருகை தரவுள்ளனர். இந்நிலையில், நாட்டின் பல்வேறு பகுதிகளில் உண்ணப்படும் பாரம்பரிய உணவுகளை தேர்வு செய்து, அதற்கான ருசி மாறாமல் தயாரித்து, உலக தலைவர்களுக்கு பரிமாற வேண்டும் என்னும் நோக்கில் நட்சத்திர உணவகங்கள் ஏற்பாடுகளை தீவிரப்படுத்தி வருகிறார்கள். புது டெல்லியில் உள்ள தாஜ் பேலஸ் உணவகத்தில், 120க்கும் மேற்பட்ட சமையல் கலை நிபுணர்கள், நாடு முழுவதுமுள்ள மிகச்சுவையான 500 உணவு வகைகளை தேர்வு செய்துள்ளனர்.
உணவுவகைகள் தேர்வு செய்யும் பணி 3 மாதங்களாக மேற்கொள்ளப்பட்டது
மேலும் இக்குழு கடந்த 3 மாதங்களாக தேர்வு செய்த உணவு வகைகளை செய்து பார்த்து அதற்கான ருசியினை கூட்டுவதற்கான பணிகளை மேற்கொண்டு வருகின்றனர் என்று கூறப்படுகிறது. மாநாட்டிற்கான இம்மெனுவில், நாட்டில் உள்ள அனைத்து சுவைமிக்க பாரம்பரிய உணவுகளையும் சேர்த்துவிட வேண்டும் என்னும் குறிக்கோளுடன் இக்குழு பணியாற்றி வருவதாக தெரிகிறது. அதன்படி ஒரு தட்டில் 12 வகை பொருட்கள் இருக்கும் என்று கூறப்படும் நிலையில், சாலையோர கடைகளில் கிடைக்கும் உணவு முதல் பனியாரம், பாவ் பாஜி வரை இதில் அடங்குமாம்.
500 தொழிலதிபர்களுக்கு அழைப்பு
தொடர்ந்து, ஒரு நாளைக்கு விருந்தினர்களுக்கு 170 வகை உணவுகள் பரிமாற திட்டமிடப்பட்டுள்ளதாம். அதில் சிக்கன் போன்ற அசைவ உணவுகள் மட்டுமின்றி, தென்னிந்திய உணவான மசால் தோசை முதல் பானி பூரி, பேல் பூரி, ரசகுல்லா, வடாபாவ் உள்ளிட்ட அனைத்தும் இடம்பெற்றிருக்கும் என்று கூறப்படுகிறது. மேலும் இந்திய குடியரசு தலைவர் கொடுக்கும் விருந்திற்கு 500 தொழிலதிபர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என்று செய்திகள் தெரிவிக்கிறது.
தங்கம் மற்றும் வெள்ளி முலாம் பூசிய பாத்திரங்களில் உணவு பரிமாறப்படும்
டெல்லி பிரகதி மைதானம் பாரத் மண்டபத்தில் நடக்கவுள்ள இந்த உச்சிமாநாட்டின் விருந்திற்கு வரும் வெளிநாட்டு பிரதிநிதிகள் மற்றும் தலைவர்களுக்கு தங்கம் மற்றும் வெள்ளி முலாம் பூசிய பாத்திரங்களில் உணவு பரிமாற வேண்டும் என்று திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கான ஏற்பாடுகளை தாஜ் பேலஸ் உணவகம் உள்ளிட்ட 11 உணவகங்கள் செய்து வருகிறதாம். இதனால் அந்த குறிப்பிட்ட உணவகங்களுக்கு ஐரிஸ் மெட்டல்வார் என்னும் கிராக்கரி நிறுவனம் சார்பில் வெள்ளி மற்றும் தங்கத்தட்டுக்கள் அனுப்பப்பட்டுள்ளது.
தினை உணவுகளுக்கு முக்கியத்துவம்
அதேபோல், ஜெய்ப்பூரிலிருந்து 15,000 வெள்ளி டம்ளர், தட்டுக்கள், ஜாடி உள்ளிட்டவைகளும் வரவைக்கப்பட்டுள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கிறது. இதனிடையே இந்தியா இந்தாண்டினை தினை ஆண்டாக கொண்டாடி வருவதால் தினை உணவுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படவுள்ளது என்றும் கூறப்படுகிறது. இந்த விருந்தில் பாரம்பரியமான இனிப்பு வகைகளோடு பழங்கள், காய்கறிகள் உள்ளிட்டவைகளும் வைக்கப்படவுள்ளதாம். இந்த உச்சி மாநாட்டினை முன்னிட்டு 2 நாட்களுக்கு டெல்லியில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.