இந்தியாவில் ஜி 20 மாநாடு - வரும் 26ம் தேதி புதிய கட்டிடம் திறப்பு
சர்வதேச பொருளாதார முக்கிய பிரச்சனைகள், நிர்வாகம் வடிவமைப்பு மற்றும் உலகளாவிய கட்டமைப்பு ஆகியவற்றுள் ஜி20 மாநாடு முக்கிய பங்கு வகிக்கிறது. இம்முறை இந்தியாவின் தலைமையில் 2023ம் ஆண்டு நவம்பர் 30ம்தேதி வரை ஜி20-மாநாடு நடைபெறவுள்ளது. இதில் பேரிடர் அபாயத்தினை குறைக்க புதிய பணிக்குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் மூலம் ஒருங்கிணைக்கப்பட்ட குழுவின் 3 கூட்டங்கள் ஆண்டு முழுவதும் நடத்த திட்டமிடப்பட்ட நிலையில் இதன் 3வதுகூட்டம் சென்னையில் வரும் 24ம் தேதி முதல் 26ம்தேதி வரை நடக்கவுள்ளது. இந்நிலையில் இந்த ஜி20 உச்சி மாநாடு வரும் செப்டம்பர் மாதம் டெல்லியில் நடக்கவுள்ள நிலையில், அதற்கான ஏற்பாடுகள் தற்போது நடந்து வருகிறது. இதனை முன்னிட்டு பல்வேறு இடங்களில் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.
7,000 பேர் அமரக்கூடிய இருக்கை வசதிகள் கொண்ட அரங்கம்
ஜி 20 மாநாட்டிற்காக டெல்லி மாநிலத்திலுள்ள பிரகதி என்னும் மைதானத்தில் உள்ள ஐடிபிஓ வளாகமானது மறுவடிவமைப்பு செய்யப்பட்டு வருகிறது. 123 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ள இந்த பிரம்மாண்ட கட்டிடத்திற்கு 'இன்டர்நேஷனல் எக்சிபிஷன் அண்ட் கன்வென்சன் சென்டர்' என்று பெயரிடப்பட்டுள்ளது. அதன்படி இந்த கன்வென்சன் சென்டரின் 3ம் லெவலில் 7,000பேர் அமரக்கூடிய இருக்கை வசதிகள் கொண்ட அரங்கம் உள்ளதாம். இது ஆஸ்திரேலியா சிட்னியிலுள்ள ஓபரா ஹவுஸின் 5,500பேர் அமரக்கூடிய வசதி கொண்ட அரங்கத்தினை விட பெரியது என்று கூறப்படுகிறது. இது உலகளவில் நடக்கும் மாநாடுகள், கலை நிகழ்ச்சிகள், உள்ளிட்டவை நடத்த ஏற்ற இடமாக கருதப்படுகிறது. இந்நிலையில் இந்த கட்டிடம் நடக்கவிருக்கும் ஜி 20 மாநாட்டிற்காக வரும் 26ம் தேதி திறக்கப்படவுள்ளது என்று செய்திகள் வெளியாகியுள்ளது.