
இந்தியாவின் நாடுகடத்தல் கோரிக்கையில் மற்றுமொரு வெற்றி: தொழிலதிபர் மெஹுல் சோக்ஸி பெல்ஜியத்தில் கைது
செய்தி முன்னோட்டம்
பஞ்சாப் நேஷனல் வங்கி(PNB) கடன் மோசடி வழக்கில் தேடப்பட்டு வந்த தப்பியோடிய வைர வியாபாரி மெஹுல் சோக்ஸி, பெல்ஜிய அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார் என்று ஹிந்துஸ்தான் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
CBI மற்றும் அமலாக்க இயக்குநரகம்(ED) உள்ளிட்ட நிறுவனங்களின் வேண்டுகோளின் பேரில், மும்பை நீதிமன்றங்கள் அவருக்கு எதிராக பிறப்பித்த ஜாமீனில் வெளிவர முடியாத வாரண்டுகளைத் தொடர்ந்து இந்த கைது மேற்கொள்ளப்பட்டது.
2018ஆம் ஆண்டு முதல் தலைமறைவாக இருக்கும் சோக்ஸி, ஏப்ரல் 11ஆம் தேதி கைது செய்யப்பட்டபோது மருத்துவ சிகிச்சைக்காக ஐரோப்பாவில் இருந்ததாகக்கூறப்படுகிறது.
ஆதாரங்களின்படி, PNB-ஐ ரூ.13,500 கோடிக்கு மேல் மோசடி செய்ததில் அவர் ஈடுபட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுக்காக அவர் தேடப்பட்டுவந்தார்.
இந்த ஊழலில் அவரது மருமகன் நீரவ் மோடியும் சம்பந்தப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தஞ்சம்
போலி ஆவணங்கள் மூலம் ரெசிடென்ஸி கார்டு பெற்ற மெஹுல் சோக்ஸி
தப்பியோடிய தொழிலதிபர் ஆண்ட்வெர்ப் நாட்டில் 'ரெசிடென்ஸி கார்டு' பெற்று வசித்து வருவதாக தகவல்கள் வெளியானதை அடுத்து, மெஹுல் சோக்ஸி பெல்ஜியத்தில் இருப்பதை அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.
இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுவதைத் தவிர்ப்பதற்காக பெல்ஜியத்தில் வதிவிடத்தைப் பெறுவதற்காக சோக்ஸி தவறான மற்றும் ஜோடிக்கப்பட்ட ஆவணங்களைக் கொடுத்ததாக அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
"சோக்ஸி பெல்ஜிய அதிகாரிகளிடம் தவறான அறிவிப்புகளையும் போலி ஆவணங்களையும் சமர்ப்பித்துள்ளார். மேலும் தனது விண்ணப்பச் செயல்பாட்டில் தனது தேசியத்தை தவறாகப் பிரதிநிதித்துவப்படுத்தியுள்ளார். இந்தியா மற்றும் ஆன்டிகுவாவின் தற்போதைய குடியுரிமையின் விவரங்களை வெளியிடத் தவறிவிட்டார்" என்று ஆதாரங்களை மேற்கோள் காட்டி அறிக்கை தெரிவித்துள்ளது.
மறுபுறம், நிரவ் மோடி தற்போது லண்டன் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரை இந்தியாவுக்கு நாடு கடத்துவதை எதிர்த்து வழக்குத் தொடர்ந்துள்ளார்.