LOADING...
ஃபுட் ரிவ்யூ செய்பவரா நீங்கள்? தமிழ்நாடு உணவுப் பாதுகாப்புத் துறையின் புதிய கிடுக்கிப்பிடி உத்தரவு
உணவுப் பாதுகாப்புத் துறை கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து அறிவுறுத்தியுள்ளது

ஃபுட் ரிவ்யூ செய்பவரா நீங்கள்? தமிழ்நாடு உணவுப் பாதுகாப்புத் துறையின் புதிய கிடுக்கிப்பிடி உத்தரவு

எழுதியவர் Venkatalakshmi V
Jun 24, 2026
03:55 pm

செய்தி முன்னோட்டம்

சமூக வலைத்தளங்களில், குறிப்பாக யூடியூபில் உணவகங்கள் குறித்து 'ஃபுட் ரிவ்யூ' செய்யும் யூடியூபர்களுக்கு தமிழ்நாடு உணவுப் பாதுகாப்புத் துறை தற்பொழுது புதிய, கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து அறிவுறுத்தியுள்ளது. இனி வரும் நாட்களில் உணவகங்களின் வெளிப்புற அழகையோ அல்லது உள் அலங்காரத்தையோ மட்டுமே காட்டி வீடியோக்களை வெளியிடக் கூடாது என்றும், நுகர்வோரின் ஆரோக்கியத்தை முன்னிறுத்திச் சில முக்கிய விதிகளை பின்பற்ற வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

விதிகள்

உணவுப் பாதுகாப்புத் துறையின் புதிய முக்கிய விதிகள்

யூடியூபர்கள் மற்றும் உணவு விமர்சகர்கள் இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் (FSSAI) முறையான உரிமம் அல்லது பதிவு பெற்ற கடைகளில் மட்டுமே ஃபுட் ரிவ்யூ செய்ய வேண்டும். கடையின் வெளித்தோற்றத்தை மட்டும் காட்டாமல், அங்கு சமையலறை மற்றும் உணவுகள் தயாரிக்கப்படும் இடம் சுகாதாரமான முறையில் பராமரிக்கப்படுகிறதா என்பதை நேரடியாகக் கண்காணித்துக் காட்சிப்படுத்த வேண்டும். உணவகங்களில் பயன்படுத்தப்படும் மூலப்பொருட்களின் தரம் மற்றும் தூய்மை குறித்து நுகர்வோருக்குத் தெளிவான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மட்டுமே பதிவுகள் அமைய வேண்டும்.

காரணம்

இந்த உத்தரவு ஏன் முக்கியம்?

இன்றைய காலகட்டத்தில் பல யூடியூபர்கள் பணத்தை பெற்றுக்கொண்டு (Paid Promotions), உணவின் தரம் மற்றும் கடையின் சுகாதாரம் குறித்து ஆராயாமல், வெறும் விளம்பர நோக்கத்திற்காக மட்டுமே ரிவ்யூக்களை வெளியிடுவதாகப் புகார்கள் எழுந்துள்ளன. இதனை முறைப்படுத்தவும், பொதுமக்களுக்குத் தரமான உணவு கிடைப்பதை உறுதி செய்யவும் இந்த அதிரடி அறிவுறுத்தலை உணவுப் பாதுகாப்புத் துறை வெளியிட்டுள்ளது. விதிகளை மீறும் உணவகங்கள் மற்றும் தவறான தகவல்களைப் பரப்பும் பக்கங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

Advertisement