டெல்லி அவசர சட்டத்திற்கு எதிராக காங்கிரஸின் ஆதரவை நாடும் அரவிந்த் கெஜ்ரிவால்
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று(ஜூன் 1) அவசர சட்டம் தொடர்பாக காங்கிரஸுக்கு மூன்றாவது செய்தியை அனுப்பினார். தேசிய தலைநகரில் உள்ள அதிகாரிகளின் இடமாற்றம்/நியமனம் மீதான லெப்டினன்ட் கவர்னரின் கட்டுப்பாட்டை மீட்டெடுக்கும் மத்திய அரசின் முன்மொழியப்பட்ட சட்டத்திற்கு எதிராக அவர் நேற்று தமிழக முதல்வரிடம் ஆதரவு கோரினார். அரசாங்க அதிகாரிகளை நியமிப்பதற்கு இடமாற்றுவதற்கும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்திற்கே அதிகாரம் உள்ளது என்று உச்ச நீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பளித்தது. மேலும், டெல்லியின் துணைநிலை ஆளுநர், டெல்லி மாநில அரசாங்கத்தின் பேச்சை கேட்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர். இந்த உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு டெல்லியில் ஆளும் ஆம் ஆத்மி கட்சிக்கு சார்பாகவும், டெல்லியின் துணைநிலை ஆளுநரும் மத்திய அரசின் பிரதிநிதியுமான வி.கே.சக்சேனாவுக்கு எதிராகவும் வந்திருந்தது.
காங்கிரஸிடம் இருந்து எந்த பதிலும் கிடைக்கவில்லை
இது நடந்து சில நாட்களுக்குள் மத்திய அரசு ஒரு அவசர சட்டத்தை கொண்டு வந்தது. மத்திய அரசின் இந்த அவசர சட்டத்திற்கு எதிராக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தற்போது எதிர்கட்சிகளின் ஆதரவை திரட்டி கொண்டிருக்கிறார். இந்நிலையில், நேற்று அவர் திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலினை சந்தித்தார். அதற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த கெஜ்ரிவால் "இதற்கு காங்கிரஸும் ஆதரவு அளிக்க வேண்டும். 2024ஆம் ஆண்டு தேர்தலுக்கான எதிர்க்கட்சிகள் கூட்டணி குறித்து நேரில் சந்தித்து தீர்மானிக்கலாம்." என்று கூறியுள்ளார். கெஜ்ரிவால் ஏற்கனவே காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே மற்றும் ராகுல் காந்தி ஆகியோரை சந்திக்க முயன்றார். ஆனால் இன்னும் காங்கிரஸிடம் இருந்து எந்த பதிலும் கிடைக்கவில்லை.