MLA-க்களுக்கு கார், காப்பீடு ரூ.25 லட்சம்: சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் வெளியிட்ட அதிரடி அறிவிப்புகளின் தொகுப்பு
செய்தி முன்னோட்டம்
தமிழ்நாடு சட்டப்பேரவையில் சட்டப்பேரவை 110 விதியின் கீழ் முதலமைச்சர் விஜய் மக்கள் நல்வாழ்வு, பால் வளம் மற்றும் மக்கள் பிரதிநிதிகளுக்கான வசதிகளை உள்ளடக்கிய பல்வேறு முக்கிய நலத்திட்ட அறிவிப்புகளை வெளியிட்டார். தவெக கட்சி ஆட்சி அமைத்து நடைபெறும் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் இது. இதில் பட்ஜெட் மீதான விவாதங்கள் தற்போது நடைபெற்று வருகிறது. அதில் இன்று முதல்வர் சில முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். அவற்றின் தொகுப்பை இங்கு பார்ப்போம்.
ஆவின்
ஆவின் பால் கொள்முதல் விலை உயர்வு
பால் உற்பத்தியாளர்களின் உழைப்பைக் கௌரவிக்கும் வகையில், ஆவின் பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ₹38-லிருந்து ₹41 ஆக உயர்த்தப்படுகிறது.
இதனால் அரசுக்கு மாதம் ₹30 கோடியும், ஆண்டுக்கு ₹360 கோடியும் கூடுதல் செலவாகும்.
இத்திட்டத்தின் மூலம் மாநிலத்தில் உள்ள 3 லட்சத்து 16 ஆயிரத்திற்கும் அதிகமான பால் உற்பத்தியாளர்கள் பயனைடைவார்கள்.
மருத்துவத்துறை
மருத்துவத்துறை மற்றும் காப்பீட்டுச் சீர்திருத்தங்கள்
முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டத்தின் நிதி வரம்பு ₹5 லட்சத்தில் இருந்து ₹25 லட்சமாக உயர்த்தப்படுகிறது.
இதில் திருநங்கைகளுக்கான மருத்துவ மற்றும் அறுவை சிகிச்சை சேவைகளும் புதிதாகச் சேர்க்கப்படுகின்றன.
சென்னை பெரம்பூரில் ₹300 கோடி மதிப்பில் 400 படுக்கைகளுடன் கூடிய நவீன மருத்துவமனை அமைக்கப்படும்.
சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சைப் பிரிவும், மதுரை ராஜாஜி மருத்துவமனையில் மண்டலப் புற்றுநோய் மையமும் நிறுவப்படும்.
மாநிலம் முழுவதும் புற்றுநோய் தடுப்பு மற்றும் சிகிச்சையை மேம்படுத்த ₹673.44 கோடி மதிப்பீட்டில் முதல்வரின் புற்றுநோய் பராமரிப்பு இயக்கம் செயல்படுத்தப்படும்.
அரசு மருத்துவக் கல்லூரிகளில் ₹351 கோடி செலவில் கூடுதல் இடங்கள் உருவாக்கப்படுவதோடு, 7 புதிய அரசு செவிலியர் கல்லூரிகளும் தொடங்கப்படும்.
MLAக்களுக்கு
MLA-க்களுக்கான வாகன வசதி மற்றும் படிகள்
சட்டமன்ற உறுப்பினர்களின் மக்கள் பணியை எளிதாக்க, அனைத்து எம்.எல்.ஏ.-க்களுக்கும் அரசு சார்பில் வாகனம் வழங்கப்படும்.
ஓட்டுநர், எரிபொருள் மற்றும் வாகனப் பராமரிப்புச் செலவுகளுக்காக மாதந்தோறும் ₹75,000 வாகனப் படியாகவும், அலுவலகப் பணிகளுக்கு உதவியாளரை நியமிக்க மாதந்தோறும் ₹25,000 உதவியாளர் படியாகவும் வழங்கப்படும்.
விசிக சட்டமன்ற உறுப்பினர் ஜோதிமணியின் கோரிக்கையை ஏற்று இத்திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.