மணிப்பூரில் மீண்டும் வன்முறை: துப்பாக்கிச்சூட்டில் 10 பேர் காயம், 4 பேர் கடத்தல்
மணிப்பூரில் நேற்று நடந்த வன்முறையில் 2 போலீசார் உட்பட 10 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்களில் இரண்டு போலீஸ் கமாண்டோக்கள், ஒரு கிராமப் பெண் மற்றும் 65 வயது பழங்குடியின ஆண் ஒருவருர் ஆகியோர் அடங்குவர். காங்போக்பி மாவட்டத்தின் எல்லையான இம்பால் மேற்கு மாவட்டத்தின் அடிவாரத்தில் பாதுகாப்புப் படையினருக்கும் அடையாளம் தெரியாத துப்பாக்கி ஏந்தியவர்களுக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில் 9 பேர் காயமடைந்தனர். காங்போக்பியில் வேறு ஒரு இடத்தில் அடையாளம் தெரியாத துப்பாக்கி ஏந்திய நபர்களுடன் நடந்த சண்டையில் பத்தாவது நபர் காயமடைந்தார். இம்பால் மேற்கு மாவட்டத்தில் உள்ள கோட்ரூக் மற்றும் கடங்பந்திலும் மக்கள் தாக்கப்பட்டனர்.
6 மாதமாக தொடர்ந்து கொண்டிருக்கும் மணிப்பூர் வன்முறைகள்
இம்பால் மேற்கு மாவட்டத்தில் நேற்று பணியில் இருந்த ராணுவ வீரரின் உறவினர்கள் மூவர் உட்பட நான்கு பேர் மெய்தே தீவிரவாதிகளால் கடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. "ஐந்து குக்கி மக்கள் சுராசந்த்பூரில் இருந்து காங்போக்பிக்கு பயணம் செய்து கொண்டிருந்தனர். ஆனால் அவர்கள் காங்போக்பியின் எல்லையில் உள்ள இம்பால் மேற்குக்குள்(மெய்தே சமூகம் ஆதிக்கம் செலுத்தும் மாவட்டம்) நுழைந்தபோது ஒரு மெய்தே குழுவால் அவர்கள் இடைமறித்து தாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது," என்று ஒரு மூத்த காவல்துறை அதிகாரி தெரிவித்துள்ளார். மேலும், இரண்டு மெய்தே இளைஞர்கள் குகி புரட்சிகர இராணுவத்தின்(யு) தீவிரவாதிகளால் கொல்லப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. கடந்த மே 3ஆம் தேதி முதல், 6 மாதமாக மணிப்பூரில் நடந்து வரும் வன்முறை சம்பவங்களால் இதுவரை குறைந்தது 178 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.