திருப்பதி மலையில் இலவசமாக இயக்கப்படும் பேட்டரி பேருந்து திருடுபோனதால் பரபரப்பு
திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு வருகை தரும் பக்தர்களின் வசதிக்காக திருப்பதி தேவஸ்தானம் சில இலவச கட்டணமில்லா பேருந்துகளை இயக்கி வருகிறது. இதனுள் 10 மின்சார பேருந்துகளும் அடக்கம். அதன்படி நேற்று(செப்.,23)இரவு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்துகளுள் மின்சார பேருந்து ஒன்று இன்று(செப்.,24) அதிகாலை 3 மணியளவில் காணாமல் போனது என்பது தெரியவந்தது. இதனையடுத்து தேவஸ்தானம் மூலம் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது. அவர்களின் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து காவல்துறை தங்கள் விசாரணையினை துவங்கினர். இந்நிலையில், ரூ.2 கோடி மதிக்கத்தக்க பக்தர்களுக்கான இலவச மின்சார பேருந்தினை கடத்தி கிட்டத்தட்ட 80கிமீ., ஓட்டிச்சென்ற அந்த மர்ம நபர் அப்பேருந்தில் சார்ஜ் தீர்ந்ததால் பாதி வழியிலேயே விட்டுவிட்டு தப்பி ஓடியுள்ளார். தற்போது அந்த நபரை காவல்துறையினர் தேடி வருகிறார்கள்.