வேதாந்தாவுடன் கூட்டு முயற்சியில் இருந்து விலகும் ஃபாக்ஸ்கானின் முடிவு; இந்தியாவிற்கு பின்னடைவு இல்லை
இந்தியாவில் தைவானைச் சேர்ந்த ஃபாக்ஸ்கான் மற்றும் இந்திய நிறுவனமான வேதாந்தா இணைந்து புதிய செமிகண்டக்டர் தயாரிப்பு தொழிற்சாலையை உருவாக்குவதற்காகத் திட்டமிட்டு வந்தன. 19.5 பில்லியன் அமெரிக்க டாலர்களை இந்தியாவில் தாங்கள் உருவாக்கவிருக்கும் செமிகண்டக்டர் தொழில்சாலையில் முதலீடு செய்யவிருப்பதாக அந்நிறுவனம் கடந்த ஆண்டு அறிவித்திருந்தன. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் குஜராத் மாநிலத்தில் புதிய செமிகண்டக்டர் தொழிற்சாலையை அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தமும் கையெழுத்தானது. ஆனால், கடந்த மே மாதம் திடீரென வேதாந்தா நிறுவத்துடன் செமிகண்டக்டர் தொழிற்சாலையை அமைக்கும் கூட்டு முயற்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தது ஃபாக்ஸ்கான். உலகளவில் இந்தியாவை செமிகண்டக்டர் விநியோக சங்கிலியில் முக்கியமான சந்தையாக மாற்ற முயற்சிக்கும் பிரதமரின் திட்டத்திற்கு இந்த பிரிவு-முடிவு பெரும் பின்னடைவாக அமைந்திருப்பதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
மத்திய அமைச்சரின் ட்விட்டர் பதிவு:
இதனைத் தொடர்ந்து, ஃபாக்ஸ்கான் மற்றும் வேதாந்தாவின் இந்த பிரிவு, இந்தியாவிற்கு பின்னடைவு இல்லையா என்பது குறித்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவொன்றைப் பதிவிட்டிருக்கிறார் மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை துணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர். "வேதாந்தாவுடனான கூட்டு முயற்சியில் இருந்து பிரியும் ஃபாக்ஸ்கானின் முடிவு, இந்தியாவின் செமிகண்டக்டர் தயாரிப்பு இலக்கில் எந்தவொரு மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை. இது இந்தியாவிற்கு எந்த வகையிலும் பின்னடைவும் இல்லை" என அந்தப் பதிவில் குறிப்பிட்டிருக்கிறார் ராஜீவ் சந்திரசேகர். மேலும், "இரு தனியார் நிறுவனங்களின் தனிப்பட்ட முடிவு மட்டுமே. அந்த நிறுவனங்களும் செமிகண்டக்டர் தொழில்நுட்பத்தில் முன்னனுபவம் இல்லாதவை. கடந்த 18 மாதங்களில் செமிகண்டக்டர் தயாரிக்கும் இலக்கில் வேகமாக முன்னேறியிருக்கிறது இந்தியா. இது தொடக்கம் மட்டுமே" எனவும் தன்னுடைய பதிவில் குறிப்பிட்டிருக்கிறார் அவர்.