கேரளா குண்டுவெடிப்பு சம்பவம் - தமிழக பாதுகாப்பினை உறுதி செய்ய வலியுறுத்தும் உளவுத்துறை
கேரளா மாநிலம் களமசேரி என்ற ஊரில் உள்ள மாநாடு மையம் ஒன்றில், கிறிஸ்தவ வழிபாட்டு கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது. யெகோவாவின் பிரார்த்தனைக் கூட்டம் என்ற பெயரில் நடைபெற்ற அந்த மூன்று நாள் கூட்டத்தின் கடைசி நாளான அக்.,29ம் தேதி, தொடர்ச்சியாக மூன்று குண்டுகள் வெடித்ததாக தகவல்கள் கூறுகின்றன. இந்த சம்பவத்தில் 12 வயது சிறுமி உள்ளிட்ட 3 பேர் உயிரிழந்தனர், 50க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதனை தொடர்ந்து டொமினிக் பாண்டியன் என்பவர், தானாக சரணடைந்து இந்த குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு தான் தான் காரணம் என்று வாக்குமூலம் அளித்துள்ளார் என்று காவல்துறை தரப்பில் தகவல்கள் தெரிவிக்கப்பட்டது.
கண்காணிப்பை தீவிரப்படுத்துமாறு கடிதம்
இச்சம்பவம் குறித்து தற்போது தீவிர விசாரணை நடந்து வருகிறது. இந்த குண்டுவெடிப்பு காரணமாக நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு காவல்துறையினர் உஷார் நிலையில் செயல்பட்டு வருகிறார்கள். குறிப்பாக, கேரளாவின் எல்லைப்பகுதியிலுள்ள தமிழ்நாடு மாவட்டங்கள், தலைநகர் டெல்லி. மும்பை, சென்னை உள்ளிட்ட இடங்களில் காவல்துறை தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், தமிழகத்தின் அனைத்து மாவட்ட ஆணையர், உளவுத்துறை துணை ஆணையர், ரயில்வே ஏடிஜிபி, காவல்துறை கண்காணிப்பாளர், ஐஜி, டிஐஜி.,உள்ளிட்டோருக்கு தமிழக உளவுத்துறை சார்பில் கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. அதில், தமிழகத்திலுள்ள ஜெகோவா பிரார்த்தனை அரங்குகள், மாநாட்டு மையங்கள், தூரகங்கள், அமெரிக்கா, இஸ்ரேல், ஐரோப்பா, இங்கிலாந்து நாடுகளின் தொடர்புடைய இடங்கள், சுற்றுலா தளங்கள் உள்ளிட்ட பகுதிகளில் கண்காணிப்பினை தீவிரப்படுத்தி பாதுகாப்பினை உறுதி செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.