மாமல்லபுர துணை நகரத்தில் இருந்து சட்டப்பேரவை சர்ச்சைகள் வரை: என்ன நடந்தது இன்று?
இந்த ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டம் இன்று தொடங்கியது. தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இந்த வருடத்தின் முதல் கூட்டத்தை தன் உரையுடன் தொடங்கி வைத்தார். "தமிழக சகோதர சகோதரிகளுக்கு வணக்கம். முதல்வர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துகள்" என்று தமிழில் கூறிய ஆளுநர், தன் உரையை ஆரம்பித்தார். இந்த உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக, காங்கிரஸ், விசிக, மதிமுக, சிபிஐ சிபிஎம் ஆகிய கட்சிகள் வெளிநடப்பு செய்தனர். இந்த உரையில், "மாமல்லபுரம் அருகே புதிய துணை நகரம் அமைக்கப்படும். இதற்காக 500 பேருந்துகள் கொள்முதல் செய்யப்படும்" என்று ஆளுநர் தெரிவித்திருக்கிறார்.
சட்டசபையில் என்ன சர்ச்சை?
தமிழக அரசு வடிவமைத்து கொடுத்த உரையை மாற்றி படித்ததாக ஆளுநர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஆளுநர் உரையை வாசிக்கும் போது, தமிழ்நாடு, திராவிடம், அண்ணா, பெரியார், கலைஞர், அம்பேத்கர், போன்ற வார்த்தைகளை வேண்டுமென்றே ஆளுநர் தவிர்த்தாக திமுக கூட்டணி கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளனர். ஆளுநர் உரையை ஆங்கிலத்தில் படித்து முடித்ததும் அதே உரையைத் தமிழில் பேரவைத்தலைவர் மு.அப்பாவு வாசித்தார். இதனையடுத்து, பேரவையில் பேசிய முதல்வர் ஸ்டாலின், "தமிழக அரசு தயாரித்த உரையை ஆளுநர் முறையாக படிக்கவில்லை." என்று குற்றம் சாட்டினார். இதற்கிடையில், முதல்வர் தன் உரையை முடிக்கும் முன்பே ஆளுநர் பாதியில் வெளியேறினார். அதன்பின், "உரையில் ஆளுநர் சொந்தமாக சேர்த்துப்படித்த எதுவும் அவைக்குறிப்பில் இடம்பெறாது" என்று சட்டப்பேரவையில் ஓர் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.